கிரிக்கெட் உலகில் தலைசிறந்த கேப்டன்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் தவிர்க்க முடியாத பெயராக மகேந்திர சிங் தோனி என்ற பெயர் இடம்பெற்றிருக்கும். அதேபோல், சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாகவும் தன்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கியிருக்கிறார். முக்கியமாக இவரின் தலைமையில், சக வீரர்களின் பங்களிப்போடு டி20 உலக கோப்பை (2007), 50 ஓவர் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என மூன்று ICC கோப்பைகளை வென்றிருக்கிறது இந்திய அணி.
இவர்மீது பல புகழ்ச்சிகள் பொழியப்பட்டாலும், சிலர் குற்றச்சாட்டுகளையும் வைக்கிறார்கள். அந்த வரிசையில், 2007, 2011-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சிறந்த பேட்டிங் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்குக்கு எப்போதும் இடமுண்டு.
தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தோனியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் யோகராஜ் சிங். “தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் முகத்தை அவரே கண்ணாடியில் பார்க்கட்டும்… மிகப்பெரிய கிரிக்கெட்டர்தான். ஆனால் என் மகனுக்கு எதிராக அவர் செய்தது எல்லாம் இப்போது வெளிவருகின்றன. என் வாழ்நாளில் அதை நான் மன்னிக்கவே மாட்டேன்.
என் வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை நான் செய்ததே இல்லை. ஒன்று, எனக்குத் தவறு செய்த யாரையும் நான் மன்னித்ததில்லை. மற்றொன்று, அவர்கள் என் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும், என் பிள்ளைகளாக இருந்தாலும் என் வாழ்க்கையில் சேர்த்ததில்லை.” என்று கூறியிருந்தார்.
இந்த நேர்காணலில் தோனியை மட்டுமல்ல, இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முதல் கேப்டன் கபில் தேவையும் விமர்சித்துள்ளார். “நம் காலத்தின் தலைசிறந்த கேப்டன் கபில்தேவ்… ‘உங்களை இந்த உலகமே திட்டும் நிலைக்கு உங்களைத் தள்ளுவேன்’ என்று அவரிடம் நான் கூறியிருந்தேன். இன்று, யுவராஜ் சிங்கிடம் 13 கோப்பைகள் இருக்கின்றன, உங்களிடம் ஒரே ஒரு உலகக் கோப்பை மட்டுமே இருக்கிறது.” என்று யோகராஜ் சிங் விமர்சித்திருக்கிறார்.
இதில், முக்கியமான விஷயமே தன்னுடைய தந்தை இவ்வாறு பேசும்போதெல்லாம் யுவராஜ் சிங் பெரும்பாலான நேரங்களில் அதை மறுத்ததுமில்லை, அப்படித்தான் எனக் கூறியதுமில்லை. இவ்வாறிருக்க, தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் யோகராஜ் சிங்கை சாடி வருகின்றனர்.