ஹேமா கமிட்டியின் அறிக்கை மாலிவுட் மட்டுமன்றி அனைத்துப் பக்கங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதி குறித்துப் பேசி வருகிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் நடிகை ராதிகா, “கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடையை மாற்றினேன்.” எனக் கூறியிருந்தார். இதனையடுத்து ராதிகா நடித்துவரும் ‘தாயம்மா’ என்ற சீரியலுக்கு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
“கேரளாவிலிருந்து சிறப்பு புலனாய்வுக் குழு உங்களை விசாரித்ததாக தகவல் கிடைத்ததே?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராதிகா, “4 நாளைக்கு முன்னாடி எஸ்.ஐ.டி-ல (சிறப்பு புலனாய்வுக் குழு) எனக்கு கால் பண்ணாங்க. சமீபத்துல நான் பேசிய விஷயம் தொடர்பாக என்கிட்ட பேசினாங்க. எனக்கு தொல்லைக் கொடுத்த நடிகர் பத்தி கேட்டாங்க. ‘அதை நான் சொல்லமாட்டேன்’னு சொல்லிட்டேன். தமிழ் சினிமாவுல தவறுகள் நடக்குறது இப்போ குறைஞ்சு போச்சு. படிச்சவங்க பலர் இங்க வந்துட்டாங்க. ஆனா, எங்கேயோ ஒரு இடத்துல தவறுகள் நடக்குறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.
எனக்கு வந்த பிரச்னையை அப்போ சொல்லாமா இப்போ சொல்றீங்கனு கேட்கிறாங்க. அப்போ நான் என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணிட்டேன். மோகன்லால் சாரே ‘இது என் செட்ல நடந்ததா’னு கேட்டாரு. சார் நான் பெயர் சொல்ல விரும்பலனு சொல்லிட்டேன். என் வாழ்க்கைல என்ன பிரச்னை வந்தாலும் நான் எதிர்கொண்டிருக்கேன். பெண்கள் பிறவியிலேயே பலமானவங்க. பாலியல் தொந்தரவு கொடுத்தவங்க பெயரை சொல்ல முடியாது. அந்த மாதிரியான இடத்துல நான் எப்படி கையாளணுமோ அப்படி கையாண்டேன். நான் நாசர் கிட்ட ‘வலுவான கமிட்டி வைங்க’னு சொல்லியிருக்கேன்.” என்றவர், “நிர்பயா வழக்குக்கான தீர்ப்பு கிடைக்கிறதுக்கு ரொம்ப ஆண்டுகள் தாமதமாச்சு. கொல்கத்தாவுல ஒரு பெண்ணுக்கு இப்போ அநீதி நடந்துருக்கு.
இன்னைக்கு பிரதமர் மோடி இந்த மாதிரியான வழக்குகள் உடனடியாக முடிக்கணும்னு சொல்லியிருக்காரு. நான் எல்லா நடிகர்கள், இயக்குநர்கள்கூட வேலை பார்த்திருக்கேன். முன்பு இருந்த மாதிரி ஆபத்து இப்போ இல்ல. இப்போ காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்துறாங்களானு தெரியல. ஏனெனில் இப்போ இருக்கிறது வேற மாடல்.
நடிகைகளை தாண்டி மற்ற கதாபாத்திர நடிகைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தயாரிப்பு நிறுவனம்தான். இதை பத்தி நான் தயாரிப்பாளர் கவுன்சில்லையும் சொல்லியிருக்கேன். பாதுகாப்பான கேரவன், கழிப்பிடம் போன்றவை தயாரிப்பு நிறுவனம்தான் பார்த்துக் கொடுக்கணும்.” என்றார்.
சமீபத்தில் ஹேமா கமிட்டி தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த், `எனக்கு அதை பத்தி தெரியாது’ எனப் பதிலளித்தார். இதனை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராதிகா, “உங்களுடைய மெளனம் தவறாக புரிந்துகொள்ளப்படும். இதைப் பத்தி என்ன சொல்லணும்னு நினைக்க வேண்டாம். நான் இந்த பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறதுக்காக எல்லோர்கூடவும் சேர்ந்து செயல்படுவேன்னு சொல்லலாம். பெரிய நடிகைகள் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு அனைத்து ஹீரோக்களுக்கும், இயக்குநர்களுக்கும் தெரியும். அவங்க வந்து அந்த பெண்களுக்காக ஒரு வார்த்தை சொன்னால் சந்தோஷமாக இருக்கும்.” எனக் கூறினார்.