பரியேறும் பெருமாள் என்ற ஆழமான சமூக அரசியல் கொண்ட திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இவரின் நான்காவது படைப்பாக வாழை திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்த, பார்த்த சம்பவங்களைத் திரைப்படங்களில் பதிவுசெய்துவரும் மாரி செல்வராஜ், இந்த வாழை திரைப்படத்தில் தான் உட்பட தன்னுடைய கிராமமே அனுபவித்த துயரத்தையும் வர்க்க கொடுமையைப் பதிவு செய்திருக்கிறார்.
வாழை வெளியான நாள்முதல், சினிமா வட்டாரம் மட்டுமல்லாது பரவலாக அனைத்து தரப்பிலிருந்தும் மாரி செல்வராஜுக்கும், படக்குழுவிற்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும், அமெரிக்காவில் வாழை திரைப்படத்தைப் பார்த்து மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன்.
காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என்று பாராட்டியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, முதல்வரின் பாராட்டுக்கு எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கும் மாரி செல்வராஜ், “என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன், மாமன்னனைத் தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.