பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து வட இந்தியாவில் வெளியாகும் தங்கலான் படத்துக்காக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விக்ரம்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தொடக்கக் காலத்தில் செய்த தவறு ஒன்றை வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார். 1990ல் ‘என் காதல் கண்மணி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாகத் திரைத்துறையில் நுழைந்த விக்ரம், மணிரத்னத்தின் பாம்பே படத்தைத் தவறவிட்டது பற்றிப் பேசியுள்ளார்.
பாம்பே படத்தில் நடிக்க மறுத்ததாகக் கூறப்பட்ட வதந்திகள் பற்றி விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நான் படத்தில் நடிக்க மறுக்கவில்லை. படத்தில் நடிக்க நான் இறுதி செய்யப்பட்டிருந்தேன். ஆனால் கடைசிக் கட்ட ஆடிஷனில் சொதப்பிவிட்டேன். மணி சார் கையில் ஸ்டில் கேமரா இருந்தது. அவர் என்னை நடிக்கச் சொன்னார். ‘அந்த பெண் ஓடுகிறாள், அவளைப் பார்த்து உறைந்து போய் நிற்க வேண்டும்’ என்றார். பின்னர், ‘நிறுத்தாமல் தொடர்ந்து நடிங்க’ என்றார். அவர் கையில் வீடியோ கேமரா இல்லை, நான் ஏன் நடிக்க வேண்டும் எனக் குழம்பி விட்டேன். ஆனால், நான் நடித்தால்தான் அவரால் ப்ளர்ரான புகைப்படத்தை எடுக்க முடியும் என்பது தாமதமாகத்தான் புரிந்தது.” எனப் பதிலளித்தார்.
பாம்பே படத்தை இழந்ததற்காக வருத்தப்பட்டதை விளக்கிய அவர், “மணி சாருடன் இணைந்து பணியாற்றுவது என் கனவு. அவருடன் ஒரு படத்தை முடித்துவிட்டால் அதன்பிறகு ரிடயர்ட் ஆகிவிட்டாலும் சரி என நினைத்திருந்தேன். வேறெதுவும் எனக்குத் தேவையில்லை. ஆனால் போட்டோ ஷூட்டில் சொதப்பியதால் தினமும் அழுதுகொண்டிருந்தேன். ஒரு வளர்ந்த மனிதனான நான் இரண்டு மாதங்கள் அழுதுகொண்டிருந்தேன். அந்தப்படம் இந்திய அளவில் ஹிட் ஆனதுடன் இன்றும் கல்ட் படமாக நிலைத்திருக்கிறது.” என்றார்.
பாம்பே படத்தை நழுவவிட்டாலும், 2010ம் ஆண்டு ராவணன், 2022ல் பொன்னியின் செல்வன் அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வர் 2 என மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விக்ரம்.