ஆந்திராவில் கனமழைக்கு 10 பேர் உயிரிழப்பு: தெலங்கானாவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

விஜயவாடா: ஆந்திராவில் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகேநேற்று அதிகாலையில் கரையைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு, குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள்அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்: பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கனமழை, நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா, கோதாவரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மிதக்கும் 110 கிராமங்கள்: தெலங்கானாவின் பல பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. இதனால், கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதுகுறித்த தகவலை மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் கொண்டு சென்றார். உயிரிழப்பை தடுக்க அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அமித் ஷா உத்தரவிட்டார்.

மெகபூபாபாத் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் அடித்துச் சென்றதில் அதில் இருந்த ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 3 பேரை காணவில்லை.

இதற்கிடையே, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறைகளை திறந்து பாதுகாப்புஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் சாந்தி குமாரி உத்தரவிட்டுள்ளார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க ஏதுவாக, ஹைதராபாத், விஜயவாடா பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துஅரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறைவிடப்படுவதாக தெலங்கானாஅரசு அறிவித்துள்ளது.

99 ரயில்கள் ரத்து: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக பெரும்பாலான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால்,99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் தென் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர்ரேவந்த் ரெட்டி ஆகியோர் தங்கள்மாநில உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது, வெள்ள நிவாரணபணிகளை முடுக்கி விடுமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.