Duleep Trophy 2024: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போது மிகவும் வறட்சியான காலகட்டம் எனலாம். ஆக. 7ஆம் தேதி கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா மோதியது. அதன்பின் சுமார் 45 நாள்களுக்கு மேலாக எவ்வித சர்வதேச போட்டியும் இன்றி இந்திய வீரர்கள் ஓய்வில் உள்ளனர்.
தற்போதைக்கு இங்கிலாந்து – இலங்கை (ENG vs SL) டெஸ்ட் தொடர், பாகிஸ்தான் – வங்கதேசம் (PAK vs BAN) டெஸ்ட் தொடர் என மற்ற அணிகளின் போட்டிகள் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறது. இந்திய அணிக்கு (Team India) வரும் செப். 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் இருக்கிறது. எனவே, அதுவரை இந்திய ரசிகர்களுக்கு தீனிப்போடும் வகையில் உள்நாட்டு தொடரான துலிப் டிராபி வரும் செப். 5ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் பல முன்னணி வீரர்கள் விளையாடி உள்ளனர்.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் துலிப் டிராபி
மொத்தம் 4 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். இந்த மூன்று சுற்று போட்டிகளின் முடிவில் முதல் இடம்பிடிக்கும் அணி கோப்பையை வெல்லும். அதாவது ஒவ்வொரு சுற்றிலும் 2 போட்டிகள் என மொத்தம் 6 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் முதல் சுற்று நிறைவடைந்த உடனேயே வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வுக்குழு தேர்வு செய்ய உள்ளது. எனவே, இந்திய டெஸ்ட் அணியில் யார் யாருக்கு வாய்ப்பு என்பது துலிப் டிராபிதான் முடிவு செய்ய இருக்கிறது. அந்த வகையில், துலிப் டிராபியில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகள் குறித்தும், அதில் எந்த அணி கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும் இதில் காணலாம்.
Team D: ஷ்ரேயஸ் ஐயர் அணி
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணியில் மொத்தம் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், அக்சர் பட்டேல், கேஎஸ் பரத், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இருப்பினும், இஷான் கிஷன் இருப்பதால் கேஎஸ் பரத்திற்கும், ஹர்ஷித் ராணா இருப்பதால் துஷார் தேஷ்பாண்டேவுக்கும் பிளேயிங் லெவனில் இடம் இருக்க வாய்ப்பில்லை. பேட்டிங்கில் யாஷ் தூபே, அதர்வா டைடே, ரிக்க புய் ஆகியோர் முக்கிய ஆவர். சௌரப் குமார் மற்றும் சரண்ஷ் ஜெயின் ஆகியோர் அக்சர் படேல் உடன் இணைந்து சுழல் தாக்குதலில் ஈடுபடுவார்கள். ஆஃப் ஸ்பின்னரான சரண்ஷ் ஜெயின் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
Team C: ருதுராஜ் கெய்க்வாட் அணி
சிஎஸ்கே கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் இந்த சி அணியின் கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார். இதில் சாய் சுதர்சன், ரஜத் பட்டிதார், சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், உம்ரான் மாலிக், வைஷாக் விஜயகுமார், மயங்க் மார்க்கண்டே, சந்தீப் வாரியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மானவ் சுதர், ஹிருத்திக் ஷோகின், அபிஷேக் போரெல் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. கௌரவ் யாதவ், அன்சுல் கம்போஜ், ஆர்யன் ஜூயல், ஹிமான்சு சௌகான் ஆகியோர் பெஞ்சில் அமரவைக்கப்படுவார்கள். இந்த அணியும் சற்று பேலன்ஸ் ஆன அணியாக பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முதல் சுற்று போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது.
Team B: அபிமன்யூ ஈஸ்வரன் அணி
இந்த அணி நட்சத்திர வீரர்கள் நிரம்பிய அணியாக உள்ளது. அபிமன்யூ ஈஸ்வரன் இந்த அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், முஷீர் கான், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராத், யாஷ் தயாள், முகேஷ் குமார், சாய் கிஷோர், ராகுல் சஹார், என பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
எனவே, பிளேயிங் லெவனை அமைப்பது கடினம்தான். நாராயணன் ஜெகதீசனும் இதில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். நிதிஷ் குமார் ரெட்டி அவரது உடற்தகுதியை நிரூபித்துவிட்டார். இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஜடேஜாவும் திடீரென தொடரில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Team A: சுப்மான் கில் அணி
இந்த அணியிலும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர். சுப்மான் கில் மட்டுமின்றி, மயங்க் அகர்வால், ரயான் பராக், துருவ் ஜூரேல், கேஎல் ராகுல், திலக் வர்மா, சிவம் தூபே, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில், தனுஷ் கோட்டியான் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம்கிடைக்க வாய்ப்பு. விக்கெட் கீப்பிங்கில் கேஎல் ராகுலா, துருவ் ஜூரேலா என்பது பெரும் கேள்வியாக இருக்கும்.
எந்த அணி பெஸ்ட்?
வரும் செப். 5ஆம் தேதி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் ஏ அணியும், பி அணியும் மோதுகின்றன. அதே நாளில் ஆந்திராவின் அனந்தபூரில் தொடங்கும் போட்டியில் சி அணியும், டி அணியும் மோதுகின்றன. இந்த நான்கு அணிகளில் அபிமன்யூ ஈஸ்வரனின் பி அணிதான் பலமான அணியாக பார்க்கப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும், துடிப்பான இளம் வீரர்களும் சமமான அளவில் இருப்பதால் பி அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் எனலாம். ஜடேஜாவுக்கான மாற்று வீரரையும் பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.