பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவரமான கே.சி. தியாகி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியியின் தலைவரும், பிஹார் மாநில முதல்வருமான நிதிஷ் குமாருக்கு இந்த ராஜினாமா கடிதத்தை கே.சி. தியாகி நேற்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கே.சி.தியாகி கூறியுள்ளதாவது: கடந்த சில மாதங்களாக நான் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து என்னை விலக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் என்னால் பணிபுரிய முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவியுங்கள். இவ்வாறு அதில் கே.சி.தியாகி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளராக அறிவித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி உத்தரவிட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை கே.சி.தியாகி ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கியஜனதா தளம் கட்சி தெரிவித் துள்ளது.
ஆனால், வக்பு திருத்த மசோதா, பொது சிவில் சட்டம், காஸாவில் போர் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து தியாகி கூறிய கருத்துகளால் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைமை அதிருப்தியடைந்ததாகவும், அதனால்அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பிஹார் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பாஜகவுடன் மோதல் போக்கை உருவாக்கும் வகையில் பொதுவெளியில் கருத்துகளை கே.சி. தியாகி வெளியிட்டதால் அவர் மீது கட்சித் தலைமை அதிருப்தி கொண்டிருந்தது.
ஐக்கிய ஜனதா தளத்துக்கும், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் இடையில் குழப்பத்தையும், தேவையற்ற உரசலையும் உருவாக்கும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்து பொது அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு,தங்களுடன் தியாகி கலந்தாலோ சித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைமை உணர்ந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.