காட்டாங்குளத்தூர்: கல்லூரி மாணவர்களிடம் எளிதில் புழங்குகிறதா போதைப்பொருள்? – போலீஸ் ரெய்டின் பின்னணி

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் எளிதில் புழங்கும் பொருளாகவே மாறிவிட்டது கஞ்சா என்ற குற்றச்சாட்டு எழத்தொடங்கி சில காலம் ஆகிவிட்டது. மாநகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அதன் எல்லை விரிவடைந்து சென்றுகொண்டிருக்கிறது. `கஞ்சா வேட்டை’ எனும் பெயரில் தமிழ்நாடு காவல்துறை அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினாலும் ஒரு சில இடங்களில் கஞ்சாவைக் கைப்பற்றதான் முடிகிறதே தவிர, தமிழ்நாட்டின் எல்லைக்குள் வர முடியாதபடி தடுக்கவோ, போதைப்புழக்கத்தை மட்டுப்படுத்தவோ முடியவில்லை.

இந்தநிலையில் தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் சென்னை அருகே உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கைப்பற்றியிருப்பதோடு, 30-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள்மீது வழக்கு பதிவும் செய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை.

காட்டாங்குளத்தூர் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா

சென்னை அருகே பொத்தேரி-காட்டாங்குளத்தில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் கல்லூரி மாணவர்களிடையே போதைப்புழக்கும் சர்வசாதாரணமாக நடந்துவருவதாக தாம்பரம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளிலும், வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கஞ்சா, போதை சாக்லெட், போதை ஊசிகள், போதை மாத்திரைகள் என பல வகைகளில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகிவருவதாகக் காவல்துறையினருக்கு கூடுதல் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அதிகாலையில் அதிரடி சோதனையில் இறங்கினர். இந்த சோதனையில் மாணவ, மாணவிகளின் அறைகளிலிருந்து அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில், போதை பவுடர்கள், பாங், கஞ்சா புகைப்பதற்கான உபரகணங்களான ஸ்மோக்கிங் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதை வைத்திருந்த பெண் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதில், 21 பேர்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஒரு பெண், மூன்று வடமாநிலத்தவர், 11 கல்லூரி மாணவர் என 14 பேரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்களின் படிப்பைக் கருதி பெண் உள்பட 11 கல்லூரி மாணவர்களை ஜாமீனில் விடுவித்தார். மேலும், டப்லு, மகேஷ்குமார், சுனில்குமார் ஆகிய மூன்று பேருக்கு 13-ம் தேதி காவல்நீட்டிப்பு செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில், விசாரணைக்குள்ளான மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்த A+ ரெளடியான செல்வமணியை காவல்துறையினர் அதிரடியாக கைதுசெய்திருக்கின்றனர். கூடுவாஞ்சேரி அருகே பதுங்கியிருந்த ரெளடி செல்வமணியைக் கைது செய்த காவல்துறையினர் அவனிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா, பட்டா கத்திகளை கைப்பற்றினர். இதையடுத்து, ரெளடி செல்வமணியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவர்களிடையே பேசியபோது,“இன்று நேற்று அல்ல… பல ஆண்டுகளாகவே எங்கள் பகுதியில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்புழக்கம் இருந்துவருகிறது. இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்கூட நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் வசதிவாய்ந்தவர்கள் என்பதால் இதைப் பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பலரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர். எங்கள் கல்லூரி மட்டுமல்லாமல் சென்னையிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் இதுதான் நிலைமை. இதேபோல அனைத்து கல்லூரிகளையும் அதன் விடுதிகளையும் காவல்துறையினர் சோதனையிட்டால் இதில் எந்த அளவுக்கு மாணவர்களிடையே போதைப்பொருள்கள் ஊடுவிருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!” என்றனர்.

கஞ்சா

இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் அ.தி.மு.க ஐ.டி விங் பொறுப்பாளர் சி.டி. நிர்மல்குமார், “கடந்த மூன்று வருடத்தில் பள்ளி, கல்லூரி வரை இறங்கி சோதனை செய்யும் அளவிற்கு மோசமான நிலையை தமிழகம் எட்டியிருக்கிறது!” என விமர்சித்திருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, “ சென்னை அருகே பொத்தேரி, காட்டாங்குளத்தூர் பகுதிகளில் ஆண்கள், பெண்கள், தங்கும் விடுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் கஞ்சா சோதனை. தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை…தென்னிந்தியாவில் போதைப் பொருள் தலைநகராக மாறிக்கொண்டுவரும் தமிழகம்..!” என விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.