கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம்: மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம்

ரிஷிகேஷ்: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த வழக்கில் மம்தா பானர்ஜி அரசு சார்பில் வாதாடுபவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராகவும் உள்ளார்.

பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத் தில், ‘‘இச்சம்பவம் அடிக்கடி நடைபெறும் சம்பவம்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உத்தரகாண்ட்மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்ற சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய செயல். ஆனால் சிலரின் தவறானகருத்துக்கள் கவலை அளிக்கின்றன. மூத்த வழக்கறிஞராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவர், இச்சம்பவத்தை அடிக்கடி நடைபெறும் சம்பவம் என அலட்சியமாக கூறும்போது அது நமது வேதனையை அதிகரிக்கிறது. புண்பட்ட நெஞ்சில் உப்பை போடுவதாக உள்ளது. இவர்கள் தாங்கள் கூறியது பற்றி சிந்தித்து பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும். இதை அரசியல் கோணத்துடன் பார்ப்பது ஆபத்தானது. இது சார்பற்ற நிலையை அழித்துவிடும்.

சாதாரண விஷயத்துக்கு எல்லாம் ரோட்டில் நின்று போராட்டம் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், கொல்கத்தா பெண் மருத்துவர் விஷயத்தில் மவுனம் காக்கின்றன. அவர்களின் மவுனம், கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்ற கொடிய குற்றத்தை விட மோசமானது.

இவ்வாறு ஜெகதீப் தன்கர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.