புதுடெல்லி: கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தின்போது ஒரு தனி மனிதர் 41 போலீஸாரை காயப்படுத்தினாரா? என்று மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி கொல்கத்தாவில் பஷ்சிம்பங்கா சாத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. போலீஸார் தடியடி நடத்தியதில் மாணவர்கள் காயமடைந்தனர். கூட்டத்தினரை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.
இந்த வழக்கில் மாணவர் அமைப்பின் தலைவர் சயான் லஹிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சயான் லஹிரியின்தாயார் அஞ்சலி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், சயான் லஹிரியை கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவித்தது.
லஹிரி ஜாமீனில் வெளிவந்ததை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
கபில் சிபல் கூறும்போது, “ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸார் மீது மாணவர் அமைப்பின் தலைவர் சயான் லஹிரி கடுமையாகத் தாக்குதல் நடத்தினார். இதில் 41 போலீஸார் காயமடைந்தனர். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது’’ என்றார்
அப்போது நீதிபதிகள், கபில்சிபலைப் பார்த்து கேள்வி எழுப்பினர். நீதிபதிகள், ‘‘கொல்கத்தா வில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். எதற்காக சயான் லஹிரி என்பவரை மட்டும் போலீஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்? போராட்டத்தில் 41 போலீஸார் காயமடைந்துள்ளனர் என்று கூறுகிறீர்கள்.
சயான் லஹிரி என்ற ஒரு தனி மனிதர் தாக்குதல் நடத்தி 41 போலீஸார் காயமடைந்து விட்டனர் என்று கூறுகிறீர்களா? மன்னிக்கவும். இந்த வழக்கில் கருணை காட்ட முடியாது. உங்களது மனு நிராரிக்கப்பட்டுவிட்டது’’ என்று தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வரவேற்றுள்ளார்.