மதுரை: மாநகராட்சிகளில் சுய சான்றளித்தல் அடிப்படையில் கட்டிடங்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கும் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையில் 14.68 லட்சம் மக்கள் வசித்தனர். தற்போது 18.72 லட்சம் மக்கள் வசிப்பதாக மாநகராட்சி கூறுகிறது. அதனால், நகர்பகுதியில் மக்கள் அடர்த்தியும், புறநகரில் நகர விரிவாக்கமும் அதிகரிக்கிறது. மக்கள் வீடு கட்டுவதற்காக, மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறுவதற்கு உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. மேலும், பதிவு பெற்ற பொறியாளர் மூலம் முறையான ஆவணங்களை வைத்து அனுமதிக்கு விண்ணப்பித்தாலும், பணம் வழங்காவிட்டால் கள ஆய்வு, ஆவணங்கள் ஆய்வை தாண்டி அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மதுரை மட்டுமில்லாது, தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிலே இதுபோன்ற சிரமங்களை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்களுடைய சிரமங்களை போக்க, 2,500 சதுரஅடி வரையிலான மனையில், 3,500 சதுரஅடியில் கட்டப்படும் வீடுகளுக்கு ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியது இல்லை. கட்டிட பணிகள் முடிந்ததும், முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் அரசின் இந்த எளிய நடைமுறைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதனால், புதிதாக வீடு கட்டுவோர் தற்போது ஆர்வமாக, மாநகராட்சி கட்டிட அனுமதி பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து வருகின்றனர்.
மதுரை மாநகராட்சியில், ஐந்து மண்டலங்களையும் சேர்த்து கடந்த ஒரு மாதத்தில் 190 பேர் கட்டிட அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அவர்கள், கட்டிடம் கட்டுவதற்கான இடத்தின் பட்டா, வரைப்படம் போன்றவற்றை அப்லோடு செய்து, அதற்கான கட்டணத்தையும் செலுத்தினால் உடனடியாக கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் சதுர அடிக்கு ரூ.88 கட்டிட அனுமதிக்கான கட்டணம் பெறப்படுகிறது. இந்த கட்டிட அனுமதி கட்டணம், ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் வேறுபடுகிறது.
சுயசான்று மூலம் கட்டிட அனுமதி பெற்ற பிறகு காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆன்லைன் கட்டிட அனுமதி வழங்குவதில் பல்வேறு குளறுபடிகளும், தவறுகளும் ஏற்பட்டு வருவதாகவும், இந்த முறையில் கட்டிட அனுமதி பெறுவோருக்கு முக்கிய வங்கிகள் வீட்டுக்கடன் வழங்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ”ஆன்லைனில் கட்டிட வரைப்படம் அனுமதி பெறுவதற்கு, பத்திரம், பட்டா, மூலப்பத்திரம் மற்றும் வரைப்படம் போன்றவற்றை அப்லோடு செய்ய வேண்டும். ஆனால், பட்டா மற்றும் வரைப்படத்தை அப்லோடு செய்தாலே கட்டிட அனுமதி கிடைக்கிறது. அதனால், மூலப்பத்திரத்தில் அந்த சொத்துக்கு யார் உரிமையாளர் என்பது தெரியாமல் போவதால் அந்த இடம் வரைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுமனையா என்பது தெரியாமல் தவறு நடக்க வாய்ப்புள்ளது.
மேலும், 100 பேர் விண்ணப்பித்தால் அதில் ரேண்டமாக 10 பேர் விண்ணப்பங்களை மட்டுமே நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் பார்க்கக்கூடிய வீயூ அந்த ஆன்லைன் போர்ட்டெலில் (Portal) காட்டப்படுகிறது. அதனால், மீதமுள்ள 90 பேர் விண்ணப்பங்களை பார்க்காமலே கட்டிட அனுமதி வழங்கப்பட்டுவிடுகிறது. பீல்டு விசிட் இல்லாமலே கட்டிட அனுமதி வழங்கப்படுவதால் அனைத்து விண்ணப்பங்களையும் பார்க்கக்கூடிய வசதிகளை அதிகாரிகளுக்க ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கட்டிட வரைப்பட அனுமதிக்காக இந்த முறையில் மாநகராட்சி பதிவு பெற்ற பொறியாளர் மூலம் விண்ணப்பிக்கும்போது, போர்ட்டெலில் அதிகாரிகள் பார்க்கும்போது எந்த பொறியாளர் மூலம் விண்ணப்பித்துள்ளார் என்ற விவரத்தையும் பார்க்க முடியவில்லை. விண்ணப்பத்தில் தவறு இருந்தால் அதை யாரிடம் கேட்பது தெரியாமலே தவறுடன் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுவிடுகிறது. மேலும், இந்த கட்டிட அனுமதியில் கட்டிட உரிமையாளர் கையெழுத்து மட்டுமே இருக்கும். அதிகாரிகள் கையெழுத்து, சீல் இல்லாததால் முக்கிய வங்கிகள் வங்கி கடன் கொடுக்க மறுகின்றனர். இதுபோன்ற குளறுபடிகளையும், தவறுகளையும் சரி செய்தால் இந்தத் திட்டம் சிறப்பாக இருக்கும்,” என்றனர்.