தமிழகத்தின் புதிய வனக் கொள்கை உருவாக்கம்: 15 பேர் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை

சென்னை: தமிழக அரசின் புதிய வனக் கொள்கையை உருவாக்கும் வகையில், 15 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளது.

தமிழக அரசின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வனக் கொள்கை வெளியிடப்பட்டது. இயற்கை காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அவற்றின் மரபணு வேறுபாடு பாதுகாப்பு, சுற்றுச்சூழலை உறுதி படுத்துதல், வன உற்பத்தியை மேம்படுத்துதல், காடுகளில் இருந்து பெறப்படும் நீர் அளவு அதிகரிப்பு, மரங்களின் பரப்பு அதிகரிப்பு, அதன் மூலம் கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை தணித்தல் ஆகியவற்றை நோக்கமாக வனக் கொள்கை கொண்டிருந்தது.இந்நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய புதிய வனக் கொள்கையை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு வனக் கொள்கை 2024- ஐ உருவாக்க 15 பேர் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, வனத்துறை,சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய குழுவாக இது உருவாக்கப்படுகிறது.இக்குழுவினர், அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வரைவு கொள்கையை தயார் செய்ய உள்ளனர்.

வன பாதுகாப்பு சட்டம் மற்றும் வன உயிரி பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வன பாதுகாப்பு, பல்லுயிர் மறுசீரமைப்பு, நிலையான வன மேலாண்மை, சமூகப் பங்கேற்பு மற்றும் வாழ்வாதார ஆதரவு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணித்தல் போன்ற புதிய விஷயங்களை கொண்டு இந்த வனக் கொள்கை உருவாக்கப்பட வனத்துறை தரப்பில் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.