கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சந்தீப் கோஷ் கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் மருத்துவ மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பணம் வசூலித்தார் எனவும் கூறியிருந்தார். மாணவி வழக்குடன் சேர்த்து இந்த ஊழல் புகாரையும் சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைடுத்து சந்தீப் கோஷ் மீது வழக்கு பதிவு செய்து, அவரது வீடு உட்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்
இந்த நிலையில், கடந்த 2 வாரகால விசாரணைக்குப் பிறகு நிதி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 3 நபர்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சந்தீப் கோஷ் இந்திய மருத்துவ சங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.