‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT)
விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) வருகிற வியாழன் அன்று திரைக்கு வருகிறது. சென்னையில் உள்ள தியேட்டர்களில் காலை 9 மணி காட்சிகளுக்கு இன்னமும் அனுமதிக்காமல் உள்ளதால், விஜய்யின் ரசிகர்கள் தவிப்பில் உள்ளனராம். இந்நிலையில் தனது ரசிகர் மன்றத்தினருக்கு விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜய், மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா என பலரும் நடித்துள்ள படம் ‘தி கோட்’. இந்தப் படம் வருகிறது 5-ம் தேதி வெளியாகிறது. வழக்கமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் அதிகாலை நான்கு மணி அல்லது 5 மணி காட்சிகள் இருக்கும்.
அஜித்தின் ‘துணிவு’ படத்தின் சமயம், சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது படம் பார்க்க வந்த இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். இப்படி சிக்கல்களால் அதிகாலை காட்சிகள், காலை 7 மணி, 8 மணி காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. ஆனாலும் காலை 9 மணி முதல் தான் சிறப்புக் காட்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் விஜய்யின் படத்திற்கும் 9 மணிகாட்சிகள் இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
விஜய் தரப்பில் இருந்து பிறப்பித்த உத்தரவு
ஆனால், சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்களில் மட்டும் அத்தகைய காட்சிகள் நடைபெறுகிறது என்றும், நகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் இன்னமும் 9 மணி காட்சிகள் அனுமதி கிடைக்காமல் இருக்கிறது என்றும் பேச்சுகள் இருக்கின்றன. இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களுக்கும், மக்கள் இயக்கத்தினருக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம்.
‘விஜய்யின் கட்சித் தலைமையில் இருந்து, விஜய்யின் அறிவுறுத்தலின் படி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது திரையரங்கங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் சின்னங்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது. அரசியல் ஆக்கக் கூடாது. தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள கொடியினை மட்டும் பயன்படுத்தலாம். தியேட்டர்களில் வைக்க உள்ள பேனர்கள், கொடிகள், தோரணங்கள் என அத்தனையிலும் நீலம் மற்றும் வெள்ளையிலான மன்ற கொடியையே பயன்படுத்த வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையோ, லோகோவையோ அந்த பெயரையோ பயன்படுத்தக்கூடாது” என்று உத்தரவை பிறப்பித்துள்ளனராம்.
விஜய்யின் இந்த உத்தரவு அவரது ரசிகர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள். பலரும் கட்சி கொடி, லோகோவோடு பேனர்கள் ரெடி செய்துள்ளதால், விஜய்யின் உத்தரவால் அதிர்ச்சியில் உள்ளனர் என்றும், ஆனாலும் அவரின் சொல்லுக்கு கட்டுப்படுவோம் என்கின்றனர். மேலும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டும் எனவும் அட்வைஸ் செய்யப்பட்டுள்ளதாம்.
இன்னொரு விஷயம், சென்னை மையப்பகுதிகளில் உள்ள பல தியேட்டர்களிலும் காலை 10.30 மணி காட்சிகள் தான் முதல் காட்சிகளாக இருப்பதால், அவரது ரசிகர்கள் பலரும் பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு சென்று படம் பார்க்கும் திட்டத்திலும் உள்ளதாக சொல்கிறார்கள். கேரளாவில் பல ஊர்களில் அதிகாலை நான்கு மணி காட்சிகள் இருக்கிறது என்பதால், விஜய்யின் ரசிகர்கள் பலர் கேரளா பறக்க உள்ளனர் என்கிறார்கள்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41