மும்பை புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அவர்களிடம் திருடுவதற்காக திருடர்களும் அதிக அளவில் பயணிகளோடு பயணிகளாக பயணம் செய்கின்றனர். தினமும் புறநகர் ரயிலில் ஏராளமான மொபைல் போன் திருட்டு போகிறது.
ஒரு திருடன் பெண்ணின் பேக்கை திருடுவதற்கு பதில் பெண் பயணியின் முடியை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். மும்பையில் எப்போதும் பயணிகள் நெருக்கடி அதிகமாக இருக்கும் தாதர் ரயில் நிலையத்தில் இந்த இச்சம்பவம் நடந்துள்ளது.
மும்பை போரிவலி பகுதியைச் சேர்ந்த நிதர்சனா (42) என்ற பெண் தாதர் ரயில் நிலையத்தில் இரவு 9.10 மணிக்கு நடைமேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்நேரம் கடுமையான கூட்டம் இருந்தது. நிதர்சனா தனது தோளில் ஒரு பேக் தொங்க விட்டிருந்தார். அந்த பேக் முதுகுபக்கமாக தொங்கியது.
நிதர்சனா நடந்து சென்ற போது அவரது பின்புறம் யாரோ அடிப்பது போன்று தெரிந்தது. உடனே அவர் திரும்பி பார்த்தார். அந்நேரம் அவர் அருகில் நடந்து வந்த ஒரு நபர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினான். கூட்டத்தில் அவனது முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. தப்பியோடியவன் பேக்கை திருடிச்செல்கிறானா என்று பார்த்த போது பேக் அப்படியேதான் இருந்தது. அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவுமில்லை. ஆனால் நிதர்சனாவின் முடி வெட்டப்பட்டு இருந்தது. திருடன் பேக்கை வெட்டுவதற்கு பதில் அவசரத்தில் தவறுதலாக முடியை வெட்டியுள்ளான் என்பது தெரியவந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிதர்சனா உடனே அங்கிருந்த ரயில்வே போலீஸாரிடம் இது குறித்து புகார் செய்தார்.
ரயில்வே போலீஸார் தப்பியோடிய திருடன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். நடைமேம்பாலத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது திருடன் தப்பியோடிய காட்சி பதிவாகி இருந்தது. திருடன் பேக்கை வெட்டுவதற்கு சிறிய அளவிலான கத்திரிக்கோல் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.