புதுடெல்லி: சத்தீஸ்கரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்ட நிலையில், விரைவில் நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் விஷ்ணு தியோ சாய், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நக்சலிசத்துடன் போராடி வருகிறது. நமது வீரர்கள் போராடுகிறார்கள். அவர்களின் வீரத்துக்கு வணக்கம் செலுத்துகிறோம். இன்று 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். நக்சலிசம் சுருங்கி வருகிறது. விரைவில் அது அழிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இதுவரை, தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆப்பிஎஃப்) கூட்டுக் குழு நடத்திய என்கவுன்டரில் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதனுடன், 13 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். நக்சலிசத்தை ஒழிக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும். பீஜப்பூர் மாவட்டத்தில், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஸ்தார் பகுதி போலீஸ் ஐ.ஜி.சுந்தரராஜ், “நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக்குழு ஈடுபட்டிருந்தபோது, தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லையோரம் உள்ள காட்டுப்பகுதிகளில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. பாதுகாப்புப் படையினரின் மேற்கு பஸ்தர் பிரிவு குழு நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பது பற்றி அளித்த தகவலின் படி, டிஆர்ஜி மற்றும் சிஆப்பிஎஃப் ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சலைட்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் இருந்து சீருடை அணிந்த 9 நக்சலைட்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது” என்று அவர் தெரிவித்திருந்தார். பஸ்தர் பகுதி என்பது தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் ஆகியவற்றின 7 மாவட்டங்களை உள்ளடக்கியது. இன்று நடந்த துப்பாக்கிச் சூடு உயிரிழப்பினைத் தொடர்ந்து இந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 154 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.