வரலாறு படைத்த வங்கதேசம்…
கிரிக்கெட் ரசிகர்களை குதூகலிக்க வைக்கும் வகையில் ஒரு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறது வங்கதேசம். அரசியல் புகைச்சலுக்காக செய்தியில் அடிபட்டுக் கொண்டிருந்த வங்கதேசம் என்கிற பெயர் இப்போது கிரிக்கெட்டின் வழி கொண்டாட்டத்திற்காக அடிபட போகிறது. ஆம், பாகிஸ்தான் மண்ணில் வைத்தே டெஸ்ட் சீரிஸில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து வரலாறு படைத்திருக்கிறது வங்கதேசம்.
டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு வங்கதேச அணி பயணிப்பதற்கு முன், கடந்த கால ரெக்கார்டுகள் எதுவுமே அவர்களுக்கு சாதகமாக இருந்திருக்கவில்லை. அதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்த வங்கதேச அணி 12 போட்டிகளில் தோல்வியையே தழுவியிருந்தது. ஒரே ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்திருந்தது. இதனால்தான் ராவல்பிண்டியில் வங்கதேசம் முகாமிட்ட போது அந்த அணியின் மீது யாருக்கும் எதிர்பார்ப்பு இல்லை. வழக்கம்போல இந்த அணி சொதப்பப் போகிறது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், வங்கதேசம் ஒரு புது வரலாறை படைத்திருக்கிறது.
கிரிக்கெட்டில் அரிதாக நடக்கும் கோலியாத்து தாவீதை வீழ்த்தும் கதையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டையும் வங்கதேசமே வென்றிருக்கிறது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணி முதல் முறையாக ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அப்படிப்பட்ட வெற்றிக்குப் பிறகும் பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியை வென்று தொடரை சமன் செய்துவிடும் என்ற நம்பிக்கையே பலருக்கும் இருந்தது. ஆனால், வங்கதேசம் அந்த ஒற்றை வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்ற எத்தனித்தது. அதன் விளைவாக இப்போது நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டாவது டெஸ்ட்டிலும் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
போட்டியின் முடிவை தீர்மானித்த கூட்டணி கணக்கு…
இந்த இரண்டு டெஸ்ட்களிலும் வங்கதேசத்துக்கு நிறைய சவால்கள் இருந்தது. ராவல்பிண்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. மழைக்குப் பிறகாக நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை விட வங்கதேசம் சூழலை சிறப்பாக கணித்திருந்தது. 4 வேகப்பந்து வீச்சாளர் + ஒரே ஒரு மெயின் ஸ்பின்னர் என்கிற கூட்டணி கணக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால், வங்கதேசம் தரப்பில் ஷகீப் அல் ஹசன், மெஹிதி ஹசன் என இரண்டு ஸ்பின்னர்கள் வலுவாக இருந்தனர். இந்த கூட்டணி கணக்குகள்தான் முதல் போட்டியின் முடிவை தீர்மானித்தன. பாகிஸ்தான் அணியும் தொடக்கத்தில் வங்கதேசத்தை பெரிய அபாயமாக பார்க்கவில்லை. அந்த துச்சமாக நினைக்கும் தன்மையோடு அவர்கள் எடுத்த முடிவும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை கொடுத்தது.
முதல் இன்னிங்ஸில் 448 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போதே டிக்ளேர் செய்தனர். பதிலுக்கு வங்கதேசம் நின்று ஆடி இரண்டு நாள்கள் பேட்டிங் செய்து 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. முஷ்பிகுர் ரஹீம் 341 பந்துகளில் 191 ரன்களை அடித்திருந்தார். தன்னுடைய இத்தனை ஆண்டுகால அனுபவம் மொத்தத்தையும் திரட்டி நின்று அவர் ஆடிய ஆகச்சிறந்த இன்னிங்ஸ் இது. ஓப்பனர் சத்மான் இஸ்லாமும் மெஹிதி ஹசனும் முஸ்பிகுருக்கு உதவியாக சிறப்பாக ஆடியிருந்தனர்.
பாகிஸ்தானின் திட்டம்… முறியடித்த வங்கதேசம்
முதல் டெஸ்ட்டை எப்படியாவது டிராவுக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் திட்டமாக இருந்தது. ஆனால், வங்கதேசம் விடவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் இன்னும் வேகமாக சுருட்டியது. ஷகீப் அல் ஹசனும் மெஹிதி ஹசனும் மட்டுமே இணைந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 146 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட். முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்களுக்கு தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 55.5 ஓவர்களுக்கு ஆல் அவுட். வங்கதேசம் மிக எளிதாக 30 ரன்கள் என்கிற டார்கெட்டை எட்டி பாகிஸ்தான் மண்ணில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அசத்திய ஹசன் முகமது , நஹீத் ராணா
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்கமே மழையோடுதான் ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டம் மொத்தமும் மழையால் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் அணிதான் முதல் இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்றிருந்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்படியொரு இக்கட்டான சூழலிலிருந்து லிட்டன் தாஸூம் மெஹிதி ஹசனும் அணியை மீட்டனர். 165 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து பெரும் பின்னடைவிலிருந்து அணியை மீட்டனர். முதல் போட்டியில் முஸ்பிகுர் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை இங்கே லிட்டன் தாஸ் ஆடியிருந்தார். 138 ரன்களை அவர் அடித்திருந்தார். இந்தப் போட்டியிலும் இரண்டாவது இன்னிங்ஸ்தான் பாகிஸ்தானுக்கு பிரச்னையாக அமைந்தது. 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. முதல் இன்னிங்ஸில் 85.1 ஓவர்களுக்கு தாக்குப்பிடித்திருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 46.4 ஓவர்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த முறை வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசன் முகமது மற்றும் நஹீத் ராணா ஆகிய இருவரும் அசத்தியிருந்தனர். இருவரும் கூட்டாக இந்த இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 185 ரன்கள்தான் டார்கெட். வங்கதேசம் எளிதில் வென்றுவிட்டது. 2-0 என பாகிஸ்தானையும் ஒயிட் வாஷ் செய்தது.
‘இந்த வெற்றி கொடுத்திருக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. எங்கள் அணியிலுள்ள அத்தனை வீரர்களும் நேர்மையாக முயன்று உழைத்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம்.’ என வங்கதேச கேப்டன் சாண்டோ நெகிழ்ந்திருக்கிறார். இதே மாதிரியான வெற்றிகள்தான் கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றுகின்றன.