‘தோனிதான் என் மகனின் வாழ்க்கையை சீரழித்தார். என்னுடைய மகனால் இன்னும் 3-4 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியிருக்க முடியும். அதை கெடுத்தது தோனிதான். தோனியை என் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன். கண்ணாடியின் முன் நின்று அவரே அவரிடம் சில கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும்.’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தோனி மீது கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
யோக்ராஜ் சிங் இப்படி பேசுவது முதல் முறை அல்ல. எப்போதெல்லாம் அவர் முன் மைக் நீட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் தோனியின் மீது கடுமையான விமர்சனங்களை அள்ளி இரைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரைக்கும் தோனி யுவராஜூக்கு துரோகம் செய்துவிட்டார். யோக்ராஜ் சிங்கின் கூற்றில் நியாயம் இருக்கிறதா? பின்னோக்கி பயணித்து சில விஷயங்களை அலசிப் பார்ப்போம்.
தோனியுடைய கரியரில் அவர் மூன்று மிக முக்கிய கோப்பைகளை வென்றிருக்கிறார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஓடிஐ உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அவர் வென்ற மூன்று கோப்பைகள்தான் அவரை இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர் என்ற இடத்தில் அமர்த்தியிருக்கிறது. இந்த மூன்று கோப்பைகளில் இரண்டு கோப்பைகளை யுவராஜ் இல்லாமல் தோனியால் வென்றிருக்க முடியாது.
2007 டி20 உலகக்கோப்பையில் அப்போதே 200 க்கு நெருக்கமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தார். ஓவரின் 6 பந்துகளையும் சிக்சராக்கிய அந்தத் தருணங்களையெல்லாம் மறக்கவே முடியாது. 2011 ஓடிஐ உலகக்கோப்பையில் 350+ ரன்களோடு 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகனும் அவர்தான். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஆடவில்லை.
தோனியின் கிரீடமாக பாவிக்கப்படும் இரண்டு உலகக்கோப்பைகளை வெல்ல அவரின் தளபதியாக முன் நின்ற யுவராஜ் சிங்குக்கு தோனி ஏன் துரோகம் இழைக்க வேண்டும்? அடிப்படை லாஜிக்கே இல்லையே. 2011 உலகக்கோப்பை முடிந்த சமயத்திலேயே யுவராஜூக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துவிட்டது. அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று திரும்பினார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். ஆனால், அவரால் முன்பு போன்று சீராக ஆட முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நல்ல இன்னிங்ஸ்களை ஆடினார். அதனால்தான் அணியில் நிரந்தர இடம் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டார்.
இதே காலக்கட்டத்தில் இந்திய அணியில் நடந்த மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். 2011 உலகக்கோப்பைக்கு முன்பாகவே அந்த அணியின் சில வீரர்களின் உடற்தகுதி சார்ந்து தோனிக்கு அதிருப்தி இருந்தது. அதனால்தான் 2011 உலகக்கோப்பை முடிந்தவுடனேயே அணியை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தோனி இறங்கினார். சீனியர்களையெல்லாம் மெதுமெதுவாக ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களை வைத்து அடுத்தக்கட்டத்திற்கான அணியை உருவாக்கினார். அணிக்குள் விராட் கோலி அடுத்த கேப்டனாக தலையெடுக்கத் தொடங்கினார். ரோஹித் சர்மா, தவாண், புவனேஷ்வர் குமார், ஷமி என அடுத்தக்கட்ட அணியை தோனி கச்சிதமாக வடிவமைத்தார். தோனியின் இந்த அதிரடி செயல்பாடுகள் அணிக்கு தேவையானதாகவும் இருந்தது.
இந்தியா வென்ற 2011 உலகக்கோப்பையில் இலங்கை அணி ரன்னர் அப். பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை வந்திருந்தது. அந்த அணிகளின் இப்போதைய நிலையை பாருங்கள். சீரற்று வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். இலங்கை அணியெல்லாம் பாதாளத்தை தொட்டுவிட்டது. அதற்கு அந்த அணியில் வருங்காலத்தை மனதில் வைத்து இளம் அணியை கட்டமைக்க யாருமே முன் வராமல் இருந்ததே காரணம். அரசு வேலையிலிருந்து ஓய்வு பெறுவதைப் போல எல்லா சீனியர்களும் ஒரே சமயத்தில் ஓய்வை எட்டினர். லகானை பிடித்து சரியாக இயக்க ஆளில்லாமல் அந்த அணி திணறியது. அப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு வரவே இல்லை. தோனியால் முன்னிலைப்படுத்தப்பட்ட கோலி டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார். தோனியால் முன்னிலைப்படுத்தப்பட்ட ரோஹித்தான் இந்தியாவுக்கு மீண்டும் உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.
யுவராஜூக்கு உடல்ரீதியாக ஏற்பட்ட பிரச்னை அதேநேரத்தில் அணிக்குள் தோனி முன்னெடுத்த மாற்றங்கள் என இவைதான் அணிக்குள் யுவராஜின் இடத்தை கேள்விக்குள்ளாக்கியது. மற்றபடி யுவராஜை மட்டும் குறிவைத்து அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என தோனி எந்த வேலையையும் செய்ததாக தெரியவில்லை. 2011 உலகக்கோப்பையில் க்ரெடிட் எடுத்துக்கொள்வதற்காக யுவராஜை உட்கார வைத்துவிட்டு தோனி மேலே இறங்கிவிட்டார் என அற்ப குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இதை யுவராஜே ஒத்துக்கொள்ளமாட்டார். அந்த சமயத்தில் இடதுகை பேட்டரான கம்பீரும் வலதுகை பேட்டரான விராட் கோலியும் ஆடிக்கொண்டிருந்தனர்.
கம்பீர் அவுட் ஆனால் யுவராஜ் இறங்க வேண்டும், விராட் அவுட் ஆனால் தோனி இறங்க வேண்டும். இதுதான் திட்டம். இதை யுவராஜே பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார். அது அணியின் நலன் சார்ந்தும் சூழலின் தேவையை உணர்ந்தும் எடுக்கப்பட்ட முடிவு.
2014 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றிருந்தது. இலங்கைக்கு எதிராக இறுதிப்போட்டி. அந்த அணியில் யுவராஜூம் இடம்பெற்றிருந்தார். தோனிதான் கேப்டன். அந்த இறுதிப்போட்டியில் 2011 உலகக்கோப்பை பாணியிலேயே லெஃப்ட் – ரைட் காம்பீனேஷனை மனதில் வைத்து தனக்கும் ரெய்னாவுக்கும் முன்பே யுவராஜை நம்பர் 4 -ல் இறங்கியிருந்தார் தோனி. ஆனால், சூழலுக்கு ஏற்றவாறு யுவராஜால் ஆட முடியவில்லை. 21 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே யுவராஜ் அடித்திருந்தார். பந்துகளை எதிர்கொள்ள கடுமையாக திணறியிருந்தார். இந்தியா 130 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இலங்கை எளிதில் சேஸ் செய்து உலகக்கோப்பையை வென்றது. யுவராஜால்தான் இந்திய அணி தோற்றது என கடுமையான விமர்சனங்கள் அவர் மீது பாய்ந்தது.
‘என்னுடைய கிரிக்கெட் கரியரின் மிகமோசமான நாள் அந்த இறுதிப்போட்டிதான்.’ என யுவராஜே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த இறுதிப்போட்டி முடிந்த பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் தோனி என்ன பேசினார் தெரியுமா? யுவராஜை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை.
‘வெற்றி தோல்வி என்பது அணியை சார்ந்தது. ஒரு தனிநபரை விமர்சனத்துக்கு இரையாக்காதீர்கள். யுவராஜ் தன்னால் இயன்றதை முயன்றார். அதுதான் முக்கியம். ரசிகர்கள் கோபப்படுகிறார்கள், ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்கிறீர்கள். ரசிகர்களை விட யுவராஜ்தான் கடும் அதிருப்தியில் இருப்பார். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
40000 ரசிகர்களுக்கு முன்பாக யாரும் மோசமாக ஆட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு ஆடமாட்டார்கள். அவர் முயற்சி செய்தார், முடியவில்லை. கிரிக்கெட்டில் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். இது அவருடைய நாள் இல்லை, அவ்வளவுதான். யுவராஜூக்கு மட்டுமல்ல உலகின் பல விளையாட்டு வீரர்களுக்கும் இப்படி நடந்திருக்கிறது.’ என ஒரு கேப்டனாக முன் நின்று யுவராஜூக்கு எவ்வளவு ஆதரவு தெரிவிக்க முடியுமோ அவ்வளவு ஆதரவு தெரிவித்தார்.
தோனியின் பயோபிக் படமான ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி!’ படத்தில் தோனி மறைமுகமாக சில வீரர்களை விமர்சித்திருப்பார். அதே படத்தில்தான் யுவராஜை அவ்வளவு மாஸாக காண்பிக்கவும் தோனி விட்டிருப்பார். தோனியே யுவராஜை வியந்து பார்ப்பதை போன்ற காட்சிகளெல்லாம் இருக்கும். யுவராஜை காலி செய்ய வேண்டும் என நினைக்கும் ஒருவர் தன்னுடைய பயோபிக்கிலேயே அவருக்கு அவ்வளவு இடம் கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
2019 உலகக்கோப்பைக்கு முன்பாக தன்னுடைய கரியரில் அடுத்து என்ன என்பது தெரியாமல் யுவராஜ் நின்றபோது தோனியைத்தான் தேடி செல்கிறார். தோனியிடம்தான் அறிவுரை கேட்கிறார். அப்போதுமே ரொம்பவே நேர்மையாக, ‘தேர்வாளர்கள் உன்னை இந்திய அணிக்கான வாய்ப்பாக பார்க்கவில்லை.’ என நேருக்கு நேர் கூறியிருக்கிறார் தோனி. அதுதான் தனக்கு ஒரு புதிய தெளிவை கொடுத்ததாக யுவராஜ் கூறுகிறார். வீரர் என்பதைக் கடந்து அடுத்து என்ன செய்யலாம் என்கிற யோசனைக்குள் அதன்பிறகுதான் யுவராஜ் செல்கிறார்.
ஒரு தலைவனாக வருங்காலத்தை மனதில் வைத்து இயங்குகையில் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. சூழல் சார்ந்து எடுக்கப்படும் சில கடினமான முடிவுகள் சிலரை அதிருப்தி அடையத்தான் செய்யும். அப்படி அதிருப்தி அடைந்தவர்தான் யோக்ராஜ் சிங்கும். ஆனால், காலம் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கும். தோனி எடுத்த முடிவுகளுக்கான காலத்தின் பதில்தான் இப்போது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய அணி.