உறவுகளைப் பற்றிய திரைப்படமாக கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘மெய்யழகன்’.
இந்த மெய்யழகனுக்குக் கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக, கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. பாடலாசிரியர் உமா தேவி உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி, ‘போறேன் நான் போறேன்’, ‘யாரோ இவன் யாரோ’ என்ற இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
இந்த இரண்டு பாடல்களையும் கமல்ஹாசன் பாடியிருப்பது கூடுதல் ஸ்பெஷல். அவருடைய அழுத்தமான குரல் இந்த பாடலை வேறு தளத்திற்கு மெருகேற்றியிருக்கிறது. இந்த பாடல் தொடர்பாகப் பேசுவதற்கு உமா தேவியைத் தொடர்புக்குக் கொண்டோம்.
“எனக்கு மட்டுமில்லை தமிழ் சினிமாவுக்கும் ‘மெய்யழகன்’ ரொம்ப ஸ்பெஷல். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா சார் இந்த பாடலுக்கான டியூன் கொடுத்த இரண்டு நாட்களில் என்னுடைய தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்களும், ‘இது தந்தையின் இறுதி நாட்கள்’ எனக் கூறிவிட்டார்கள். அந்த சமயத்தில் நான் என் தந்தையைச் சென்னையில் வைத்துப் பார்த்துக் கொண்டேன். அப்படியான நேரத்தில் என்னால் பாடல்களை எழுத முடியவில்லை. குறிப்பாக ‘மெய்யழகன்’ பாடல்களை எழுதுவதற்கு ரொம்பவே சவாலாக இருந்தது. அதன் பிறகு அப்பாவை ஊருக்குக் கூட்டிச் சென்று பார்த்துக் கொண்டோம்.
அப்போது இரவு நேரத்தில்தான் நான் ‘மெய்யழகன்’ படத்துக்கான பாடல்களை எழுதினேன். அப்போதுகூட என்னுடைய தந்தை தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டால் உடனடியாக நான் சென்று அவருக்கான தேவைகளைச் செய்வேன். பாடலை எழுதவில்லை. என்னுடைய அந்த நேரத்து உணர்வுகளை வைத்துத்தான் நான் இந்த இரண்டு பாடல்களையும் எழுதினேன். இயக்குநர் பிரேம் குமார் சாரும் என்னுடைய இந்த கஷ்டமான நிலைமையைப் புரிந்து கொண்டு என்னிடம் பாடல் பற்றி எதுவுமே கேட்காமலிருந்தார்.” என்றார். கமல்ஹாசன் குறித்துக் கேட்டபோது, “நான் எழுதியிருக்கிற அந்த இரண்டு பாடல்களையும் கமல் சார் பாடியிருக்கிறார். ‘உன்னவிட’, ‘சுந்தரி நீயும்’, ‘கண்மணி அன்போடு காதலன்’ எனக் காதலைப் பெருகச்செய்து, ‘சொன்னபடி கேளு’ என அன்பான மிரட்டலையும் ‘ஆளங்கட்டி மழை’ என்று தாலாட்டியும் ‘அன்பே சிவமெ’ன்று தியானப்படுத்தியும் இருக்கிறது அந்தக் குரல்.
இன்றைக்கு நேற்று இல்லை. ‘நினைவவோ ஒரு பறவை’ பாடலுக்கு அவரை விட வேற யாரையும் யோசிக்க முடியுமா என்ன? தமிழ் சினிமாவின் பொது அடையாளம் கமல் சார்! என்னுடைய வரிகள் அந்த சிம்மக்குரலினில் வழிந்து எழுந்து பெருங்கடலாய் ஆர்ப்பரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. கமல் சாரிடம் பிரேம் சார் இந்தப் பாடலை எழுதியவர் என்று என்னை அறிமுகப்படுத்தும்போது கமல் சார் என் வரிகளைப் பாராட்டத் தொடங்கினார். ஆனால் அது எதுவும் என் காதில் விழவில்லை. அந்த பெருங்கலைஞனின் முகத்தில் அந்தப் பாராட்டு வெளிப்படுவதைத்தான் நான் ரசித்துக்கொண்டிருந்தேன்.
எந்த உணர்வுகளையும் துல்லியமாய் கடத்தும் கமல் சாரின் குரலை இந்தப் பாடலுக்குப் பொருத்த வேண்டும் என்ற இயக்குநர் பிரேம் சாரின் அந்த ஐடியாதான் இந்தப்பாடல் வெளியான ஓரிரு நாட்களிலேயே மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றியாக்கியது. நாம் பிழைப்புக்காக ஊர், மண், சொந்தங்கள் என அனைத்தையும் மறந்து வெவ்வேறு நகரங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறோம். என் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர் இருக்கிறார்கள். எனக்கு ஏதேனும் பிரச்னையென்றால் உடனடியாக எனக்காக வந்துவிடுவார்கள். நானும் அவர்களுக்காகச் சென்றுவிடுவேன். இது போன்ற உறவுகளுக்கு இடையேயான பலத்தை நான் முக்கியமானதாகப் பார்க்கிறேன். மனச்சோர்வு ஏற்படும் சமயத்திலெல்லாம் என்னுடைய சொந்த ஊருக்குச் செல்வேன். அந்த மண் எனக்குப் பெரியளவிலான ஆற்றலைக் கொடுக்கும். இப்படியான விஷயங்கள்தான் இந்த பாடலில் முக்கியமானதாக இருக்கிறது.” எனப் பேசி முடித்தார்.