233 பக்கங்களைக் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானப் பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த அறிக்கை மலையாளத்தை தாண்டி அனைத்து பகுதியிலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. வாய்ப்புகள் கொடுப்பதாகக் கூறி சக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புள்ளிகளின் பெயர்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டில் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கேரளாவின் எர்ணாகுளத்திலிருக்கும் காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் நிவின் பாலி அறிக்கை ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “ஒரு பெண்ணுக்கு நான் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக வந்து கொண்டிருக்கும் பொய் செய்தியைப் பார்த்தேன். இது முழுக்க முழுக்க பொய்யானது. இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என நிரூபிக்க எந்த எல்லைக்கும் போவதாகத் தீர்மானித்திருக்கிறேன். முன்னெடுப்புகளை எடுத்து உண்மையையும் வெளிச்சத்துக் கொண்டு வருவேன். உங்களுடைய அக்கறைக்கு நன்றி. இனி , சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை சந்திக்கவுள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.