பாரீஸில் 17-வது பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தியா சார்பில் 34 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று இருக்கின்றனர். இதில் 39 வயதுடைய ராகேஷ் குமார், வில்வித்தைப் போட்டியின் தனிநபர் பிரிவில் தோல்வியைச் சந்தித்து இருந்தார். ஆனால் கலப்பு அணி வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 17 வயதுடைய ஷீத்தல் தேவியுடன்- இணைந்து 156 -155 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். ராகேஷ் குமாருக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ராகேஷ் குமார், பிளம்பராகப் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய தந்தை செய்யும் தச்சு வேலைக்கு உதவியாக இருந்திருக்கிறார். ஆனால் தற்போது வில்வித்தையில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்திருக்கிறார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ராகேஷ் குமார் குறித்து அவரின் அம்மா தர்ஷனா தேவி சில விஷயங்களை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்திருக்கிறார். ``என் மகன் பாரா ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ராகேஷ் கார் விபத்தில் சிக்கிய நாள் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
ஒருமுறை அவன் ஜம்முவுக்கு அருகிலுள்ள பந்தலாப் என்ற கிராமத்திற்கு அவனுடைய அத்தையைப் பார்க்கச் சென்றிருந்தான். அப்போது அவனுக்கு கார் விபத்து ஏற்பட்டது. முதுகு தண்டுவடத்தில் மிகப்பெரிய பாதிப்பு. ஜம்மு மருத்துவமனையில் இருந்து, அவன் அமிர்தசரஸ் கொண்டு செல்லப்பட்டான். அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். முழு குடும்பத்திற்கும் அது ஒரு கடினமான நேரம். அந்த கார் விபத்திற்குப் பிறகு, அவன் படுத்தப் படுக்கையாக இருந்தான்.
அதன் பிறகு சற்று குணமடைந்த அவனுக்கு, மொபைல் சிம் கடை ஒன்றை வைத்துக்கொடுத்தோம். முதலில் கடையைப் பார்த்துக்கொண்டான். பிறகு வில்வித்தையில் ஆர்வம் வந்து ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்து வந்தான். கிராமத்திலிருந்து விளையாட்டு வளாகத்திற்குச் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டரில் செல்லும்போது, சிலர் அவனைப் பார்த்து சிரிப்பார்கள். ஆனால் அவனது இந்தப் பதக்கங்கள் அதற்கு மிகப்பெரிய பதில்” என்று மகனின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.