மதுரை: “இபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா சென்றார். ஆனால், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு ஜாலி ட்ரிப் சென்றது போல சைக்கிள், பைக், கார் ஓட்டி சுற்றிவருகிறார்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை பிரச்சினைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை இன்று (செப்.4) நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவருடன் மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சோலை ராஜா மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜூ கூறியது: “மதுரையில் அம்ரூத் குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. எங்கள் ஆட்சி காலத்தில் புயல் வேகத்தில் நடைபெற்ற பணிகள் தற்போது மிக தொய்வாக நடைபெறுகிறது. 2021ம் ஆண்டு முடிவுற வேண்டிய குடிநீர் திட்டம் தற்போதுவரை நிறைவு பெறவில்லை.
குடிநீர், சாலை, பாதாளச் சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்துள்ளார். மேலும், மழைநீர் வடிகால் வாய்காலை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் மறுக்க முடியாது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படத்துக்கு ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை எனத் தெரியவில்லை. திமுக அரசு அராஜக போக்குடன் கண்மூடித்தனமாக செயல்படுகிறது.
இபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்றார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு ஜாலி ட்ரிப் சென்றது போல சைக்கிள், பைக், கார் ஓட்டி சுற்றி வருகிறார். மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சி மீது தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொள்கிறது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.