போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருங்காட்சியகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கலைப்பொருட்களை சுருட்டிய திருடன் தப்பிக்க முடியாமல் கையும்களவுமாக போலீஸாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் கயாவைச் சேர்ந்தவர் வினோத் யாதவ். இவருடைய தொழிலே திருட்டுதான். சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்ட வினோத் பெரிய சம்பவத்தை செய்து வாழ்கையில் செட்டில் ஆகிவிடலாம் என தீர்மானித்தார். ஆனால், எங்கு திருடுவது என்ற யோசித்த அவர் போபால் அருங்காட்சியகத்தை தேர்வு செய்தார். அங்குள்ள கலைப்பொக்கிஷங்களை திருடி விற்றால் வாழ்க்கையில் கோடீஸ்வரர் ஆகிடவிடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான திட்டத்தை வகுத்தார். போபால் அருங்காட்சியகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறையாக டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்த அவர் திங்கள்கிழமை அருங்காட்சியகத்துக்கு விடுமுறை என்பதால் உள்ளே ஒளிந்துகொண்டு நிதானமாக வேண்டியதை திருடலாம் என்பதுதான் வினோத்தின் மாஸ்டர் பிளான். ஆனால், அந்த திட்டம் காலைவாரி விடும் என்பதும் காலில் காயத்துடன் மயக்கமடைந்து போலீஸாரிடம் பிடிபடு வோம் என்றும் வினோத் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலதுணை போலீஸ் கமிஷனர் (டிசிபி மண்டலம் 3) ரியாஸ் இக்பால் கூறியதாவது: வினோத் யாதவ் அருங்காட்சியகத்துக்குள் பதுங்கி குப்தர் கால தங்கநாணயங்கள், பிரிட்டிஷ் கால நாணயங்கள், நவாபி கால நாணயங்கள், நகை, பாத்திரம் மற்றும் பிற பழங்கால பொருட்கள் என ரூ.10 கோடி மதிப்பிலான கலை பொருட்களை கொள்ளையடித்துள்ளார். பின்னர் அந்தப் பொருட்களுடன் 23 அடிஉயர சுவரில் ஏறி தப்ப முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் அருங்காட்சியகத்தை பாதுகாவலர்கள் திறந்து பார்த்த போதுதான் அவர் மயங்கி கிடப்பது தெரியவந்தது. அவரின் அருகில் இருந்த பையில் ரூ.10 கோடி மதிப்புள்ள கலைப்பொருட்களையும் அங்குள்ள பாதுகாவலர்கள் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து வினோத் கைது செய்யப்பட்டார்.
அருங்காட்சியகத்திலிருந்து 50-க்கும்மேற்பட்ட கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் வேறு யாரும் அவருக்கு உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அருங்காட்சிய கட்டிடத்தில் எச்சரிக்கைஅமைப்பு இல்லாதது, பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் ஒழுங்காக வேலைசெய்யாதது மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்ட மெல்லிய கதவுகள் இந்த திருட்டு சம்பவம் நடப்பதற்கு மிகவும் சாதகமாகி விட்டது. இவ்வாறு ரியாஸ் இக்பால் தெரிவித்தார்.