அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 116 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், “திருச்சுழி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் காளிகுமார் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலைசெய்தது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைதுசெய்யக் கோரி அருப்புக்கோட்டையில் அவரின் உறவினர்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி காயத்ரியை தள்ளிவிட்டு, தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, முதற்கட்டமாக 8 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸ் விசாரணையில், டி.எஸ்.பி-யை தாக்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில், கமுதி அருகே நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 30), பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த பொன்முருகன் (23), ஜெயராமன் (24), சாய்குமார் (22), பாலாஜி (23), அம்மன்பட்டி சூர்யா (23), காளிமுத்து (24), முத்துபட்டி முருகேசன்(24), ஆகியோர் மீது 9 பிரிவுகளில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதில் பாலமுருகன் உட்பட 7 பேரைக் கைதுசெய்த போலீஸார், அவர்களை அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான முத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசனை தேடி வருகின்றனர். மேலும் சாலைமறியல் செய்த, கணேஷ் பாண்டி, முனியசாமி, ராமர், லட்சுமணன், முத்து முனியாண்டி, சரவணன் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 116 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்” எனக் கூறினர்.