மதுரை: ‘இந்து தமிழ் திசை’செய்தி எதிரொலியாக இரண்டரை ஆண்டுப் பிரச்சினைக்கு இரண்டே நாளில் தீர்வு ஏற்படும் வகையில் கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டி கண்மாய்க் கரைகளை இன்று (செப்.4) பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர். இதன் மூலம் மழைநீரை தேக்க வழி பிறந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கலிங்கபுரம் ஊராட்சி உதினிப்பட்டி கிராமத்தில் 285 ஏக்கர் பரப்புள்ள பொதுப்பணித் துறை கண்மாய் உள்ளது. இதன் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், 500 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாயிலிருந்து மறுகால் பாயும் நீர் 5 குடிநீர் குளங்களின் நீராதாரமாக உள்ளது.
இக்கண்மாய்க் கரைகளை சீரமைக்க வேண்டும் என இரண்டரை ஆண்டுகளாக விவசாயிகள் பொதுப்பணித் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுப்பணித் துறையினரும் ரூ.1.07 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி நிதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.இதற்கிடையே வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அளித்த அனுமதியால் மேலும் கரைகளை சேதப்படுத்தி சமதளமாக்கினர். இதனால் மழைநீரை தேக்க வழியின்றி விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக இன்று பொதுப் பணித்துறையினர் சேதமடைந்த கண்மாய்க் கரைகளை இயந்திரங்கள் மூலம் சீரமைத்தனர். பெரியாறு நீட்டிப்பு கால்வாய் பிரிவு உதவி பொறியாளர் முத்துக்குமார் தலைமையில் பணியாளர்கள் கவின், கனி ஆகியோர் மேற்பார்வையில் இயந்திரங்கள் மூலம் கண்மாய்க் கரைகள் சீரமைக்கப்பட்டது.
இதன் மூலம் இரண்டரை ஆண்டாக நீடித்துவந்த பிரச்சினைக்கு இரண்டு நாளில் தீர்வு கிடைத்ததாகச் சொல்லி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு உதினிப்பட்டி கிராம விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும், இதன் மூலம் பருவ மழை நீரை சேமிக்க வழி பிறந்துள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.