கீவ்: உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்து உக்ரைன் ராணுவம் அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “உக்ரைனின் மத்தியப் பகுதியில் உள்ள போல்டாவா பகுதியை நோக்கி ரஷ்யா திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பியும் கூட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல போதிய அவகாசம் இல்லாமல் போமது. ஏவுகணை தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவ அகாடமி, மருத்துவமனை ஆகியன இருந்தன. இந்தத் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்று உறுதிப்படுத்தியுள்ளது/
இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷ்யாவுக்கு கொடுப்போம்” என்று அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரைத்துள்ளனர்.
போர் முடிவுக்கு வருவது எப்போது? கடந்த 2022 ஆம் ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று அதிகாலையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. 2 ஆண்டுகள் கடந்து இன்றளவும் போர் நீடிக்கிறது. இருதரப்பிலும் உயிரிச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைனும் வேளாண் உற்பத்தி, எண்ணெய் வர்த்தகம் ஆகியவற்றில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்தச் சூழலில் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 15, 16-ம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா உட்பட 92 நாடுகள் பங்கேற்றன. ஆனால், ரஷ்யா புறக்கணித்ததால், மாநாடு தோல்வியில் முடிந்தது.
இந்த சூழலில், இந்தியா சார்பில் 2-வது அமைதி உச்சி மாநாடு நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னோட்டமாகவே, கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து, போரை நிறுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.