கொல்கத்தா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை 8 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகஅதன் முதல்வராக இருந்த சந்தீப்கோஷிடம் ஏற்கெனவே உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி சுமத்தினார்.
சட்டவிரோத விற்பனை: அனாதை பிணங்கள் சட்டவிரோத விற்பனை, உயிரி மருத்துவகழிவுகள் கடத்தல், கமிஷன் கொடுக்கும் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்தது போன்ற முறைகேட்டில் சந்தீப் கோஷ் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரது வீடுஉட்பட பல இடங்களில் சிபிஐஏற்கெனவே சோதனை நடத்தியது.இந்நிலையில் மருத்துவர் சந்தீப் கோஷ், அவரது பாதுகாவலர், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகம் செய்த இருவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர்கள் கொல்கத்தா அலிப்பூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தீப் கோஷ் மீது குற்ற சதி, மோசடி, ஊழல் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கைதானவர்களிடம் ஊழல் வழக்கில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க 10 நாள் காவல் தேவை என சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களை 8 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.