தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் – கோமலவள்ளி தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகள் மோகனா, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வருகிறார்.
மோகனாவும், கோமலவள்ளியும் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் சென்றுள்ளனர். திடீரென அவர்களின் அருகே ஒரு கார் வந்து நிற்க, மோகனா அந்த காரில் ஏற முயற்சித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத கோமலவள்ளி, அதிர்ச்சியுடன் தன் மகளை மீட்க முயற்சித்தார். காரில் இருந்த இளைஞர்கள் மோகனாவை இழுத்து தப்பி செல்ல முயற்சித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் காரை சுற்றி வளைத்தனர்.
மக்கள் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர்களில் ஒருவர் பெண்ணின் காதலன் என்று தெரியவந்தது. இது தொடர்பாக இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்த்து காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அந்தப் பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த டேனியல் என்ற இளைஞரும், மோகனாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
அதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், குடும்பத்தை மீறி தப்பிச் சென்று திருமணம் செய்ய முடிவு செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.