பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஏதுவாக 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அழைப்பு விடுத்தது. பாலியல் வன்கொடுமை தடுப்பு அபராஜிதா மசோதாவை மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக் அம்மாநில சட்டப்பேரவையின் நேற்றைய முதல்நாள் சிறப்பு அமர்வின்போது அறிமுகம் செய்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா 2024 (மேற்குவங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்)’ என்ற தலைப்பில் இந்த மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழக்க நேரும்பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்கு கள் மீதான விசாரணை ஆரம்ப அறிக்கை 21 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதம் விதிப்பதும் இந்த புதிய சட்ட மசோதாவில் அடங்கும்.

குடிமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை சட்டத்தின் முன் முழு வலிமையுடன் சந்திப்பதை உறுதி செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா மாநிலத்தின் உறுதிப்பாட்டுக்கு ஒரு சான்றாகும் என்று வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், இந்த அபராஜிதா சட்ட மசோதாவில் உடனடியாக கையெழுத்திடுமாறு முக்கிய எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்த வேண்டும். அதற்குப் பிறகு அதைச் சட்டமாக்குவது எங்கள் பொறுப்பு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.