பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை' – தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம்

மலையாளத் திரையுலகில் பெண்கள்மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா தலைமையிலான குழு அறிக்கை, மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திரைப்பட வாய்ப்புகள் தொடர்பாகப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, குடிபோதையில் சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து அத்துமீறுவது என்ற அடிப்படையில் பல மலையாள நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிகைகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக், இயக்குநர் துளசிதாஸ், நிவின் பாலி எனப் பலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறப்பு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

ஹேமா கமிட்டி| ‘அம்மா’ சங்கம் | AMMA

இந்நிலையில் மலையாளத் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லாத் திரைத்துறையிலும், எல்லாப் பணியிடங்களிலும் பெண்கள் மீதானப் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன என்பது பெரும் பேசுபொருளாகி வருகிறது. கேரளாவைப்போல எல்லா திரைத்துறையிலும் இது போன்ற துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்க வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகிலும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று (4.9.2024) தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் ‘தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி’ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தனர்.

நாசர், பூச்சி எஸ்.முருகன், கார்த்தி, ரோகிணி, சுஹாசினி, குஷ்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழக்கறிஞர் குழுவை நியமனம் செய்வது, பாலியல் புகார்களை நேரடியாக மீடியாக்களில் பேசக் கூடாது, 5 ஆண்டுகள் தடை உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தீர்மானங்கள் இவைதான்.

தீர்மானங்கள்

1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

2. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.

3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ -மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும். அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

6. யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

7. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.