விஜய் நடித்திருக்கும் ‘தி கோட்’ திரைப்படம் நாளை வெளியாகிறது.
விஜய், அரசியல் பிரவேசம் காரணமாக தனது சினிமா கரியரின் கடைசி கட்டத்தில் நின்றுக் கொண்டிருக்கிறார். ரசிகர்களும் விஜய்யின் கடைசி படங்களை கொண்டாடி தீர்க்க வேண்டுமென்கிற துடிப்பில் திரையரங்கு வாசலில் சிரமங்களை கொஞ்சம்கூட எண்ணாமல் காத்திருக்கிறார்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… டிக்கெட் புக்கிங் தொடங்கிய அத்தனை திரையரங்குகளிலும் இரண்டு நாட்களுக்கு முழுவதுமாக ஹவுஸ் ஃபுல்! ஆம், ஆறிலிருந்து அறுபது வரை என்பார்களே அதுபோலதான் அனைத்து தரப்பு ரசிகர்களின் அன்பால் முழுவதுமாக மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார் விஜய். ஒரு நான்கு வயது குழந்தை ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு துள்ளலோடும் துடிப்போடும் நடனமாடிக் கொண்டே சிரித்து ரசிக்கிறது.
அதுபோல முதிர்ச்சியடைந்த பிறகும்கூட ‘முதல் நாள் முதல் காட்சி’ பார்த்தாக வேண்டுமென்கிற ஆர்ப்பரிப்புடன் அலுவலகத்தை கட் அடித்துவிட்டெல்லாம் ஓடி வருகிறார் ஒரு இளைஞர். இவ்வளவு எதிர்பார்ப்பை உருவாக்கும் அளவுக்கு விஜய் என்ன செய்துவிட்டார்…. ஒவ்வொரு தசாப்தத்துக்கும், ஒவ்வொரு திரைப்படத்துக்கும், ஒவ்வொரு காட்சிக்கும் விஜய் கொடுத்த உழைப்பும் உற்சாகமும்தான் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வசீகரித்ததற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு தசாப்தமாக பிரித்து விஜய்யின் ‘Breakthrough’ தருணங்களை விரிவாக பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக இவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த படங்களில் அத்தனை அழகாக வசனங்களைப் பேசி தூள் கிளப்பியிருக்கிறார். இருப்பினும், சினிமா மீதான முழு காதலை வீட்டில் பெரியோர் முன்னிலையில் உடைத்த பிறகு அவர்களின் ரியாக்ஷன் கடுமையாகத்தான் இருந்திருக்கிறது. +1 படிக்கும்போதே சினிமா இவரை ஈர்த்திருக்கிறது. இவருடைய பள்ளிப் பருவத்தின் பாதி நேரத்தை உதயம் தியேட்டரில்தான் கழித்திருக்கிறார். விஜய்யும் உதயம் தியேட்டரில்தான் சினிமா மீது இதயத்தை தொலைத்திருக்கிறார் போல… சினிமாவை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்க பெரிய யுத்தமே விஜய்யின் வீட்டிற்குள் நடந்திருக்கிறது.
தந்தை எஸ்.ஏ.சி விஜய்யை டாக்டராக்கிவிடும் நினைப்பில் இருந்திருக்கிறார். ஆனால் விஜய்யின் இந்த வார்த்தை அவருக்கே ஷாக்தான்! அப்போது ஒரு இயக்குநராக விஜய்க்கு ஒரு ஸ்ட்ரிக்ட் டாஸ்க் கொடுத்திருக்கிறார். ஒரு வசனத்தை அங்கேயே லைவ்வாக பேசச் சொல்லியிருக்கிறார். அண்ணாமலை படத்தின் வசனத்தை அதிரடியாக பேசி தனது தந்தையை அசர வைத்து சினிமாவுக்கு சீட் வாங்கினார் விஜய். தொடக்கத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படங்களில் ‘ரசிகன்’ படம் இவரை தமிழ் சினிமாவில் பரிச்சயமாக்கியது. ஆக்ஷன் ஹீரோவாக களத்தில் இறங்கினாலும் இவருக்கு ஆட்டநாயகன் விருதை பெற்றுக் கொடுத்தது என்னவோ `காதல்’ திரைப்படங்கள்தான்!
ஹாலிவுட் படங்களைப் அதிகமாக தொடர்ந்த பார்த்த விஜய்க்கு ஆக்ஷன் ஹீரோவாக வேண்டுமென்பதே ஆசையாக இருந்தது. ஆனால், ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என அன்றறைய இளைஞர்கள் அனைவரும் விஜய்யை லவ்வர் பாயாக ஏற்றுக் கொண்டார்கள். சொல்லப்போனால் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் பாடல் புத்தகங்கள்தான் இல்லாத கல்லூரி மாணவர்களை அப்போது பார்க்க முடியாது. இது போன்ற காதல் திரைப்படங்களில் நடிக்கும்போதே ஒரு புதுமையையும் அப்போது கொடுக்க முயன்றிருக்கிறார். லவ்வர் பாயாக சுற்றி வந்த விஜய் 1998-ல் ‘ப்ரியமுடன்’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து ஆச்சரியத்தைக் கொடுத்தார்.
ஆனால், அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது அதுவே கடைசி! ஆனால் ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்கிற தீரா ஆசை விஜய்யிடம் இருந்தது. அதற்கும் சரியான நேரம் வரட்டுமென பொறுத்திருந்தார். அந்த பொறுமைதான் அவருக்கு வெற்றியையும் தேடி தந்தது.
ஆகஷன் ஹீரோவாக இவருக்கு ‘திருமலை’ ஒரு ‘Breakthrough’. லவ்வர் பாயாக பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட விஜய் ஆக்ஷன் ஹீரோவாக முத்திரை பதிக்க தொடங்கினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி 2கே சிறுவர் சிறுமிகளுக்கு விஜய் அவ்வளவு பெட்! பள்ளி காலங்களில் ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்த பிறகு விஜய் அது குறித்து விவாதிப்பாராம். அந்த விவாதங்கள் எது நல்ல கதை என தெரிந்துக் கொள்ள உதவியதென விஜய்யே தனது பேட்டிகளில் கூறியிருக்கிறார். நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென எண்ணிய விஜய் ரீமேக் படங்களிலும் நடித்தார். அப்படி ரீமேக் படங்களில் நடித்து ‘கில்லி’, ‘போக்கிரி’ என வெற்றிப் படங்களை வரிசையாக அடுக்கினார்.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர், அநியாத்தை தட்டிக் கேட்கும் இளைஞர் என கமர்சியல் சக்சஸ் மீட்டருக்கு தேவைப்பட்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் `இளைய தளபதி’யாக பரிச்சயமானார். விஜய்யை ஏ,பி, சி என அனைத்து சென்டர்களுக்கும் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு பாடல்களுக்கு உண்டென்றால் அது மிகையான விஷயம் கிடையாது. சி.டியில் பாடல் கேட்கும் வழக்கம் இருந்த சமயத்தில் கில்லியின் ‘கொக்கரகோ’, போக்கியிரியின் ‘வசந்த முல்லை, வேட்டைகாரனின் ‘ நான் அடிச்சா தாங்க் மாட்ட’ போன்ற எக்கசக்க பாடல்கள் படத்தின் ரிலீஸுக்கு முன்பே அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பாடல்களின் வெற்றி அன்றைய 2கே சிறுவர்களுக்கு விஜய்யை ஃபேவரைட்டாக்கி ‘போக்கிரி பொங்கல்’ என சட்டையை தூக்கி ஆடவைத்தது. 2008-க்குப் பிறகு விஜய் நினைத்தது போல அவருடைய ஆக்ஷன் ஃபார்முலா முழுவதுமாக அவருக்கு கைகொடுக்கவில்லை. ‘சினிமாவுக்கு புதிய இளைஞர் பட்டாளம் வரத் தொடங்கிவிட்டது. இனிமேலும் விஜய்யால் இங்கு தாக்கு பிடிக்க முடியாது’ என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் அப்போதும் பொறுமையோடு அடுத்த டிரெண்ட் பார்முலாவை கையில் எடுக்க தயாரானார்….
இந்தியில் ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் அப்போது அதிரடியான வெற்றியை பெற்றிருந்தது. ஷங்கர் அதனை விஜய்யை வைத்து தமிழில் எடுக்க முடிவு செய்தார். அப்போது வரை ஆக்ஷன் டெம்ப்ளேடோடு சுற்றிக் கொண்டிருந்த விஜய் ‘நண்பன்’ படத்தில் சுறு சுறுப்பான இளைஞானாக மாற்று ஃபார்முலாவில் களமிறங்கி தூள் கிளப்பினார். தமிழில் கிடைத்த ஏகோபித்த வரவேற்புக்கு பின்பு பிற மொழி திரைப்படங்களின் வாய்ப்பும் விஜய்யை எட்டியிருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்புகளை விரும்பாமலேயே இருந்தார். பிரபு தேவா இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து எடுத்த ‘ரவுட் ராத்தோர்’ படத்தில் ஒரு பாடலின் ஒரு காட்சியில் மட்டும் நடனமாடியிருப்பார்.
2012-ம் ஆண்டு முருகதாஸ் நடிப்பில் ராணுவ வீரராக விஜய் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது. எப்போதும் கமர்சியல் படங்கள் பக்கம் திரும்பாத ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தில் இணைந்ததால் படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறதென மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். கணித்ததை போல பிளாக்பஸ்டராக வந்தமைந்தது ‘துப்பாக்கி’. இதன் பிறகு விஜய்யின் கரியர் உச்சத்திற்கு ஓங்கியது. இதன் பிறகு ஃபேண்டஸி என்ற புதிய முயற்சியையெல்லாம் கையில் எடுத்தார். ஆனால் வசூலை தாண்டி விமர்சன ரீதியாக விஜய்க்கு நல்ல பெயரை அந்த படம் பெற்று தரவில்லை.
2013-க்கு பிறகு விஜய்யின் படங்களில் அரசியல் தொடர்பான வசனங்கள் அதிகளவில் பார்க்க முடிந்தது. அது பல பூதாகரமான சர்ச்சைகளை கிளப்பிய கதைகளும் இருக்கிறது. இருப்பினும், அரசியல் வசனங்கள் பேசி ‘கத்தி’, ‘மெர்சல்’ என ஹிட்களை அடுக்கினார். 2020-க்குப் பிறகு விஜய் சற்று மாற்றத்தை விரும்பி கதாபாத்திரங்களை தேர்வு செய்தார். விஜய் நடிக்கும் கதாபாத்திரங்கள் என்றாலே துடிப்புடன் எப்போது சுறு சுறுப்பாகதான் இருக்கு என மக்கள் கணித்து வைத்திருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் உடைத்து சாந்தமாக ‘பிஸ்ட்’ படத்தில் நடித்தார்.
நாளை வெளியாகவிருக்கிற ‘கோட்’ படத்தில் இளைய தளபதியாகவும், தளபதியாகவும் தொழில்நுட்ப வசதியோடு களம் காண விருக்கிறார்!
மூன்று தசாப்தங்களாக எந்தவித காரணத்தையும் காட்டி சமரசம் செய்துக் கொள்ளாமல் நடனம், ஸ்டன்ட் என விஜய் சாத்தியப்படுத்திக் காட்டிய அத்தனை விஷயங்கள்தான் இன்று அவரது மார்கெட்டை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது!
Vijay is the ‘GOAT’!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41