வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வரவிருக்கிறது. வழக்கமான விஜய் படங்களை விட இந்தப் படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நிறைய சர்ப்ரைஸ்களை ஒளித்து வைத்திருக்கிறார்.
விஜய்யின் சமகால போட்டியாளராகப் பார்க்கப்படும் அஜித்தின் ரெஃபரன்ஸ், அடுத்த தலைமுறையின் முன்னணி கதாநாயகனாகப் பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் கேமியோ, சிங்க நடைபோடும் தோனியின் சர்ப்ரைஸ் என ரசிகர்கள் குதூகலிக்கப் படத்தில் எக்கச்சக்கமான விஷயங்கள் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே.
டீ ஏஜிங்:
விஜய்க்கு டீ ஏஜிங் செய்து ‘நாளைய தீர்ப்பு’ விஜய்யை அப்படிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் படத்தின் ட்ரெய்லரிலேயே பார்த்தோம். ஆனால், நமக்குப் பெரிதாகத் தெரியாமல் இருக்கும் இன்னொரு விஷயம், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்குமே டீ ஏஜிங் செய்திருப்பதுதான். SATS குழுவில் விஜய்யின் தளபதிகளாகப் பயணிக்கும் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் வில்லன் மோகன் ஆகியிருக்குமே டீ ஏஜிங் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அவை எந்தவிதத்திலும் துருத்திக் கொண்டு தெரியாமல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டால் தொழில்நுட்ப ரீதியாகக் கோலிவுட்டில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய படமாக ‘GOAT’ என்றைக்கும் பேசப்படும்.
அஜித் ரெஃபரன்ஸ்:
அஜித், விஜய் என இருவரின் படங்களையும் இயக்கியவர்கள் என்கிற பட்டியலில் ஒரு சில இயக்குநர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கிறது. ‘GOAT’ இன் மூலம் வெங்கட் பிரபுவும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். அஜித்தின் கரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் மங்கத்தாவை வெங்கட் பிரபுதான் ரசிகர்களுக்கு விருந்தாக்கியிருந்தார். விஜய், அஜித் என இருவருக்குமே வெங்கட் பிரபு நெருக்கமானவர் என்பதால், ‘GOAT’ படத்தில் அஜித்தை எதோ ஒருவிதத்தில் இணைத்துவிடுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஏற்கனவே மங்காத்தா சமயத்தில் விஜய் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை அழைத்து விருந்து வைத்து, ‘அர்ஜூன் கேரக்டருக்கு என்னை கூப்டிருந்தா வந்திருப்பனே!’ எனக் கூறியிருந்தார். இதை வெங்கட் பிரபுவே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். விஜய்யும் அஜித்தும் ஒரு காலத்தில் பாடல்களின் வழி வசனங்களின் வழி இருவரும் மறைமுகமாக மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு இருவருமே பக்குவப்பட்டுவிட்டனர்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், ‘நண்பர் அஜித் மாதிரி கோட் போட்ருக்கேன்!’ என விஜய் பேசியிருப்பார். அதேமாதிரி, லியோ வெளியீட்டு விழாவில், ‘தலன்னா அது ஒருத்தர்தான்!’ எனப் பேசியிருப்பார். அஜித்துமே கோட் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு உடனே வெங்கட் பிரபுவை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். டிரெய்லரில் கூட மங்காத்தா படத்தின் ஒரு வசனத்தை விஜய் பேசியிருந்தார்.
இதன் பின்னணியில்தான் கோட் படத்தில் எதோ ஒரு விதத்தில் அஜித் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜித்தின் வாய்ஸ் ஓவர் படத்தில் இருக்குமா எனும் கேள்விக்கு வெங்கட் பிரபு பொறுத்திருந்து பாருங்கள் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் கேமியோ:
‘GOAT’ படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ செய்திருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்பு ஒன்றிரண்டு நாட்கள் நடந்ததாகவும் ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. நாம் விசாரித்தவரையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது உறுதிதான் என்கிறார்கள். இதற்கும் ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. இப்போது கோட் படத்தை இயக்கியிருக்கும் வெங்கட் பிரபுதான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் இயக்கவிருக்கிறார்.
இதனால்தான் சிவகார்த்திகேயன் ரொம்பவே எளிதாக ‘GOAT’ படத்திற்குள் வந்திருக்கிறார்.
தோனி சர்ப்ரைஸ்:
திருவனந்தபுரத்துக்குச் சென்று அங்கேயுள்ள கிரிக்கெட் மைதானத்தில் சில நாட்கள் ‘GOAT’ படத்திற்காகப் படப்பிடிப்பை நடத்தியிருந்தார்கள். மேலும், டிரெய்லரிலுமே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து க்ளைமாக்ஸ் நடப்பதைப் போலக் காட்டியிருக்கிறார்கள். சென்னைக்கும் மும்பைக்கும் இடையே நடக்கும் ஐ.பி.எல் போட்டியைப் படத்தில் காட்டியிருக்கிறோம் என வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். சென்னை அணிக்காக உடல் முழுவதும் மஞ்சள் வண்ணம் பூசி ஆர்ப்பரிக்கும் சரவணன் என்கிற ரசிகரையும் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
நேற்று சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் ‘GOAT’ படத்துக்காக டப்பிங் பேசியிருப்பதைப் போல ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் படத்தில் தோனியும் கேமியோ செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறதோ எனும் ஆர்வமும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. ஆனால், தோனி கேமியோ செய்யவில்லை என வெங்கட் பிரபுவே மறுத்திருக்கிறார். எனில் எந்தவிதத்தில் தோனி படத்துக்குள் இருப்பார் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
தோனியின் அனுமதி பெற்று எடுக்கப்பட்ட அவரின் பயோபிக் படத்திலேயே அவர் கேமியோ செய்திருக்கமாட்டார். 2011 உலகக் கோப்பை மேட்ச் புட்டேஜ்களை கொண்டே தோனியைத் திரையில் காண்பித்திருப்பார்கள். அதேமாதிரிதான் இங்கேயும் பி.சி.சி.ஐ.,யின் அனுமதியைப் பெற்று சிஎஸ்கேவுக்காக தோனி ஆடிய புட்டேஜ்களை படக்குழு பயன்படுத்தியிருக்கக்கூடும். பத்ரிநாத் பின்னணியில் ஒலிக்கும் கமெண்ட்ரிக்காக டப்பிங் செய்திருக்கக்கூடும்.
வில்லன் யார்?
டிரெய்லரில் நடிகர் மோகன்தான் படத்தின் முக்கிய வில்லன் போலக் காட்டியிருந்தார்கள். ஆனால், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் மோகன் முக்கிய வில்லன் இல்லை என்பதைப் போலப் பேசியிருந்தார்கள். எனில், முக்கிய வில்லன் யார் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பதைப் போல டிரெய்லரில் காண்பித்திருக்கிறார்கள். ஆனால், மூன்றாவதாக ஒரு விஜய் இருப்பதற்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அவரே கூட வில்லனாக இருக்கலாமோ எனும் சந்தேகங்களையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
AI-யில் விஜயகாந்த்:
விஜய்யின் சினிமா கரியரில் விஜயகாந்த்துக்கு முக்கிய பங்குண்டு. தொடக்கக் காலத்தில் ‘செந்தூரப்பாண்டி’ எனும் படத்தில் விஜய்க்காக முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்திருப்பார். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியும் விஜயகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்த்தை வைத்து மட்டுமே கிட்டத்தட்ட 18 படங்களை எஸ்.ஏ.சி இயக்கியிருக்கிறார். இதனால் விஜயகாந்த்தின் குடும்பத்தோடு விஜய் எப்போதுமே நெருக்கமாகத்தான் இருந்திருக்கிறார். இதன் பின்னணியில்தான் விஜய்காந்தின் மறைவுக்குப் பிறகு ‘GOAT’ படத்தில் அவரை AI மூலம் மறு உருவாக்கம் செய்து கொண்டு வர விரும்பியிருக்கின்றனர்.
சமீபத்தில் விஜய் உட்படப் படக்குழுவினர் விஜயகாந்த்தின் வீட்டுக்கே நேரில் பிரேமலதா விஜயகாந்த்திடம் நன்றியும் கூறி வந்திருந்தனர். ‘கேப்டன் பிரபாகரன்’ சமயத்திலிருந்த விஜயகாந்த்தை ரீ கிரியேட் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய்யும் அந்த கேப்டன் பிரபாகரன் காலத்து விஜயகாந்த்தும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.