விஜய்யின் நடிப்பு, வெங்கட் பிரபுவின் இயக்கம், யுவனின் இசை, AGS தயாரிப்பில் உருவாகியிருக்கும் `The GOAT’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் வெங்கட் பிரபுவின் ட்ரேட் மார்க் கூட்டணி பிரேம் ஜி, வைபவ் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
முக்கியமாக, வெங்கட் பிரபுவின் ஆதர்சன இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, `புதிய கீதை’ படத்துக்குப் பின்னர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இசைக் கூட்டணி அமைத்திருக்கிறார். இவையனைத்தையும் விட இப்படத்தின்மீது எதிர்பார்ப்பைக் கூட்டியிருப்பது, 80-களின் வெள்ளி விழா நாயகன் மோகன் இதில் வில்லனாக நடித்திருப்பதே.
1977-ல் மோகன் முதல்முறையாக அறிமுகமானதே, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாலு மகேந்திராவின் படத்தில்தான். `கோகிலா’ எனும் கன்னட படத்தில், ஹீரோவாக கமல் நடிக்க அவரின் நண்பர் கதாபாத்திரத்தில் மோகன் நடித்தார். அதையடுத்து, 1978-ல் மலையாளத்தில் `மடாலசா’ என்ற படத்தில் தனது முந்தைய படத்தின் அடைமொழியுடன் `கோகிலா’ மோகன் என்ற பெயருடன் அறிமுகமானார். அங்கிருந்து, 1979-ல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இரண்டாவது திரைப்படமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தெலுங்கு ரீமேக்கான `தூர்ப்பு வெல்லே ரயிலு’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
சாண்டல்வுட், மல்லுவுட், டோலிவுட்டில் அறிமுகமான பின்னரே கோலிவுட்டில் மோகன் அடியெடுத்து வைக்கிறார். எதார்த்த சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநரான மகேந்திரன், 1980-ல் `நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுடன் மோகனை நடிக்க வைத்தார். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக, பாலு மகேந்திராவின் இயக்கத்தில் பிரதாப் போத்தனுடன் மோகன் நடித்த `மூடுபனி’ படம் வெளியானது.
1980-ல் ஒரு மாத கால இடைவெளியில் வெளியான `மூடுபனி’, `நெஞ்சத்தைக் கிள்ளாதே’ இரண்டு படங்களுமே வெள்ளி விழா கண்டது. அதிலும், `நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் தேசிய விருதையும் வென்றது. அதைத்தொடர்ந்து, 1981-ல் `கிளிஞ்சல்கள்’ எனும் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார் மோகன். பின்னர் இரண்டாவது படமாக, 1982-ல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமான `பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படத்தில் மைக்கை கையிலெடுத்தார் மோகன். அப்போது, தன்னுடைய சினிமா கரியரில் இனி `மைக் மோகன்’ என்றுதான் அறியப்படப்போகிறோம் என்று மோகனுக்கே தெரிந்திருக்காது.
இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் இரண்டு படங்களும் வெள்ளி விழா கண்டு மிகப்பெரிய வெற்றிபெற்றன. குறிப்பாக, `பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் இவருக்குச் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத்தந்தது. அதன்பிறகு தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல மோகன் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் படங்களை ஓவர்டேக் செய்து பட்டிதொட்டியெல்லாம் பரவி வெள்ளி விழாக்களைக் கொண்டாடித் தீர்த்தன. 1984-ல் ஒரே ஆண்டில் 19 படங்கள் மோகன் நடிப்பில் வெளியாகி சாதனை படைத்தது.
மணிரத்னத்தின் `இதய கோயில்’, `மௌன ராகம்’, பாலு மகேந்திராவின் `ரெட்டை வால் குருவி’, சுந்தர்ராஜனுடன் `சரணாலயம்’, `குங்குமச் சிமிழ்’, `மெல்ல திறந்தது கதவு’ உட்பட ஆறு படங்கள் என ஏராளமான வெற்றிப் படங்களைத் தன்வசம் வைத்திருக்கிறார். ஹீரோவான பிறகும் கதையின் தேவையுணர்ந்து மற்ற ஹீரோக்களின் படத்தில் நடிக்கவும் மோகன் தயங்கியதில்லை. 100-வது நாள் என்ற படத்தின் மூலம் மோகனை வில்லனாகக் காட்டிய பெருமை, தமிழ் சினிமாவில் அரசியல், காதல், காமெடி, த்ரில்லர், ஹாரர் என அனைத்து ஜானர்களிலும் கலக்கிய இயக்குநர் மணிவண்ணனையே சேரும்.
தமிழ் சினிமாவில் மோகனுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பிறகும் சரி இவரளவுக்கு கனகச்சிதமாக மைக்கை வைத்துக் கொண்டு பாடுவது போல நடிப்பதில் அத்தனை கச்சிதமாகப் பொருந்தி நடித்தவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அந்த காலகட்டத்தில் நாயகன் மேடைகளில் பாடல் பாடுவது போன்ற கதாபாத்திரங்கள் பிரபலம். அதில் மோகனின் நடிப்பு தனித்துவமானதாக இருக்கும். அவரின் பாடல்களைப் பின்னணி குரலில் எஸ்.பி.பி பாடினாலும் மோகன் தான் பாடுகிறார் என்று மக்கள் மனதில் பதியுமளவுக்கு முகபாவனையுடன் நடித்திருப்பார். பாடுவது மட்டுமல்ல படங்களில் மோகனுக்கு வசனங்கள் பேசியதும் வேறொருவர்தான்.
அவர் எஸ்.என் சுரேந்தர். மோகனின் 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் குரல்கொடுத்திருக்கிறார். ஆனால், பின்னணியில் வசனம் பேசுவது வேறு யாரோ என்பதை மறக்கடிக்குமளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மோகன். இருப்பினும், 1988-ல் கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை மற்றும் வசனத்தில் வெளியான `பாசப்பறவை’ படத்தில் கருணாநிதி கூறியதன் பேரில் தனது சொந்தக் குரலில் பேசினார் மோகன். சமீபத்திய ஊடக நேர்காணல் ஒன்றில் மோகனே இதை நினைவுகூர்ந்திருந்தார்.
ஆர்ப்பாட்டமில்லாத என்ட்ரி, எதார்த்தத்தில் சாத்தியமில்லாத சண்டைக் காட்சிகள் என மாஸ் ஹீரோவுக்கான விதிகளையெல்லாம் தகர்த்தவர் மோகன். கதைக்குத் தேவையான நடிப்பை மட்டுமே வழங்கி கமல், ரஜினிக்கு என்கிற ஜாம்பவான்கள் கோலோச்சிய காலகட்டத்தில் வெள்ளி விழா நாயகனாக வலம்வந்தவர்தான் மோகன். அடர்த்தியான தலைமுடி, மென்புன்னகை, அப்பாவி முகம் என பெண் ரசிகைகளின் மனதில் கனவு நாயகனாக பதிந்திருந்தார். மற்ற நடிகர்களைவிடவும் இவருக்குப் பெண் ரசிகைகள் சற்று அதிகமாகவே இருந்தனர்.
காதல் காட்சிகளில் உருகுவதும், சோகத்தில் கண்கலங்க வைப்பதும் என இரு நேரெதிர் உணர்ச்சிகளையும் நடித்தாரா வாழ்ந்தாரா என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு காட்சிகளில் பிரதிபலித்திருப்பார். `சங்கீத மேகம் தேன் சிந்தும் ராகம்’, `ராஜ ராஜ சோழன் நான்’, `நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’ என குழலூதும் கண்ணனாக 80-களின் ரசிகைகளின் மனதில் தனியிடத்தில் இருந்தார் மோகன். இவரின் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் `என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என சுஹாசினி பாடுவதுபோல, இன்றும் `எங்கள் மோகன் எங்களுக்குத்தான்’ மோகனை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள் உள்ளனர்.
காதல், கொண்டாட்டம், சோகம், புரட்சி, தாலாட்டு என இன்னும் என்ன ஜானர் இருக்கிறதோ அனைத்திலும் ராகதேவனாகத் திகழும் இளையராஜாவின் இசையும், `பாடும் நிலா’ எஸ்.பி.பி-யின் குரலும் மோகனின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பகுதி. இன்றும் இரவில் ராஜாவின் பாடல்களைக் கேட்டுறங்கும் பலரின் பாடல்தொகுப்புகளில் மோகன் பாடல்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
`உதயகீதம்’, `கோபுரங்கள் சாய்வதில்லை’, `இதய கோயில்’, `மௌன ராகம்’, `விதி’, `மெல்லத் திறந்தது கதவு’, `ரெட்டை வால் குருவி’ என மோகனுக்கு இளையராஜா இசையமைத்த பெரும்பாலான படங்கள் ஆல்பம் ஹிட். அதேபோல், பாடல் காட்சிகளில் மோகனின் நடிப்புக்கு தன்னுடைய பாடல்களின் குரலால் மேலும் உயிர் கொடுத்தவர் எஸ்.பி.பி.
`தேனே தென்பாண்டி மீனே’ என உதயகீதம் பாடி, `கூட்டத்தில கோயில் புறா’ என இதய கோயிலில் காதலியைத் தேடி, `மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா’ என மனைவியிடம் மௌன ராகம் பாடி, `வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா’ என பாடு நிலவாக மக்கள் மனங்களில் மோகனை தன்னுடைய குரலால் பதிய வைத்தவர் எஸ்.பி.பி. தன்னுடைய வாழ்வின் பிரிக்க முடியாத இவ்விருவரின் மீதும் மோகனுக்கு எப்போது அளவுகடந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது.
80-களில் திரைப்படங்கள் வாயிலாக சினிமா ரசிகர்களை மகிழ்வித்த மோகனின் திரைப்பயணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் தொடங்கியது. தற்போது விஜய்யின் கோட் படத்திலும் களமிறங்கியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்!
மோகன் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படத்தின் பெயரை கமென்ட்டில் பதிவிடுங்கள்!