மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பள்ளி வகுப்பறையில் சீலிங் ஃபேன், ஜன்னல்களை மாணவிகள் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவமானது, போபாலிலுள்ள சரோஜினி நாயுடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்திருக்கிறது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஒரு மாதத்துக்கு முன்பு நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீராங்கனை வர்ஷா ஜா என்பவருக்கு எதிராகப் பள்ளி வளாகத்தில் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகள், `வகுப்பறையைச் சுத்தம் செய்யுமாறும், புல்வெளியைச் சீர்படுத்துமாறும் கட்டாயப்படுத்துகிறார்கள். ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலும் வெயிலில் நிற்க வைக்கிறார்கள். சிறிய தவறுகளுக்குக்கூட கடுமையாகத் தண்டிக்கிறார்கள். பள்ளி மாலை ஆறு மணிக்கு முடிவதால், வெகு தொலைவிலிருந்து வரும் மாணவிகள் வீட்டுச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது’ என்று குற்றம்சாட்டினர்.
மேலும், `புதிதாக நியமிக்கப்பட்டவர் தவறு செய்யும் மாணவிகளைக் கடுமையாகத் திட்டுகிறார். மரியாதைக் குறைவாகப் பேசுகிறார். இதுபற்றி பள்ளி முதல்வரிடம் தெரிவித்தபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை’ என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், இதை மறுத்த பள்ளியின் தலைமை ஆசிரியர், `அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்’ என்றார். அதேசமயம், குற்றம்சாட்டப்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் தண்டிக்க வேண்டாமென பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை இயக்குநர், வர்ஷா ஜாவை காலவரையற்ற விடுப்பில் அனுப்பினார். கூடவே, போலீஸ் குழுவும் பள்ளிக்கு வந்து சேதமடைந்த பொருள்களை ஆய்வு செய்தனர்.