Nivin Pauly: "எனக்காக நான்தான் பேச வேண்டும்…" – பாலியல் வழக்கு குறித்து நிவின் பாலி சொல்வதென்ன?

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இதன் அடிப்படையில் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு வருகிறது. பெண்கள் மட்டும் அல்ல இளைஞர் ஒருவரும் இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர் நிவின் பாலி பாலியல் தொந்தரவு செய்ததாகவும். அவருடன் சிலர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கொச்சி ரூரல் எஸ்.பி-க்கு முதலில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் ஊன்னுகல் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீதிபதி ஹேமா கமிட்டி

அந்த பெண் அளித்த புகாரில், 2023-ம் ஆண்டு ஒரு வேலையாகத் துபாய்க்குச் சென்ற சமயத்தில், ஸ்ரீயா என்ற பெண் தனக்கு நிவின் பாலி-யை அறிமுகம் செய்துவைத்ததாகவும், பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி நிவின் பாலி மற்றும் நால்வர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர்கள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி, ஸ்ரீயா உட்பட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் ஸ்ரீயா முதல் குற்றவாளியாகவும், நிவின்பாலி ஆறாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிவின் பாலி அறிக்கை

வழக்கைத் தொடர்ந்து நிவின் பாலி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “எனக்கு எதிராகக் கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என் கவனத்துக்கு வந்ததை அடுத்தே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இது உண்மைக்குப் புறம்பானதும், மோசமான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இதன் பின்னால் செயல்படுபவர்களைச் சட்டத்துக்கு முன் கொண்டுவர எந்த எல்லைக்கும் செல்வேன். என்னைப் புரிந்துகொண்டு தொலைப்பேசி மூலமும், மெசேஜ் மூலமும் தொடர்புகொண்டவர்களுக்கு நன்றி. வாய்மை வெல்லும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பின்னர் இரவு செய்தியாளர்களைச் சந்தித்த நிவின் பாலி கூறுகையில், “இந்த விவகாரத்தைப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் நான் இரவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.

நடிகர் நிவின் பாலி

எனக்கு எதிராக முதன் முதலாக இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. புகார் அளித்துள்ள பெண்ணை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை, பேசியதும் இல்லை. எனக்காக நான்தான் பேச வேண்டும். நாளை யாருக்கு எதிராக வேண்டுமானாலும் இதுபோன்ற குற்றச்சாட்டு கூறப்படலாம். அவர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன். சினிமாவில் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படலாம். இந்த குற்றச்சாட்டு என்னையும், என் குடும்பத்தையும் பலவகையில் பாதித்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதி. சட்டம் சட்டத்தின்படி செயல்படட்டும். இதைச் சட்டத்தின் வழியில் எதிர்கொள்வேன். கடந்த ஒன்றரை மாதம் முன்பும் இதுபோன்று புகார் உள்ளதாக காவல்துறை அதிகாரி அழைத்திருந்தார். அந்த பெண்ணை தெரியாது என நான் கூறியதை அடுத்து அது முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைத்து நான் அப்போது புகார் அளித்த பெண் மீது நான் புகார் அளிக்கவில்லை.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.