விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சின்ன மருமகள்’. இந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் நவீன். இவருக்கு விஜய் டெலி அவார்ட்ஸ் விருதுகள் நிகழ்வில் `Best Find Of The Year’கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவருடைய மனைவியும், செய்தி வாசிப்பாளருமான கண்மணி வழங்கி இருந்தார். இந்நிலையில் நவீனை நமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
“நம்ம இப்பதான் இங்க வந்திருக்கோம். நமக்கு இந்த வருஷமே விருதெல்லாம் கிடைக்காதுன்னு தான் நினைச்சேன். எதிர்பாராம கிடைச்ச விருதுதான் இது. அதுவும் என் மனைவி வேறொரு சேனலில் ஒர்க் பண்றாங்க. கண்டிப்பா அவங்க வர மாட்டாங்கன்னு தான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா, சர்ப்ரைஸா அவங்களை வரவழைச்சு அவங்க கையால விருது கொடுத்தது ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு!
நானும் `சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த்தும் நல்ல நண்பர்கள். அவனுக்கு `Best Actor’க்கான விருது கிடைச்சது. அப்பவே அவன்கிட்ட, `உன்னுடைய வெற்றியை என்னுடைய வெற்றியாகப் பார்க்கிறேன்’னு சொன்னேன். அவன் வாங்கினதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். நான் விருது வாங்கும் போது மேடையிலிருந்து அவனை மட்டும்தான் பார்த்தேன். கைத்தட்டி விசில் அடிச்சிட்டிருந்தான். அவன் வாங்கும்போது நானும் அதைத்தான் பண்ணேன். எங்களுக்குள்ள எந்தவித ஈகோவும் இல்லாம நல்ல நண்பர்களாக இருக்கோம்.
உண்மையை சொல்லணும்னா `சிறகடிக்க ஆசை’ தொடரில் வெற்றி வசந்த் நடிக்கிற முத்து கேரக்டருக்கான வாய்ப்பு எனக்குத்தான் முதலில் வந்தது. அந்த சமயம் நான் வேறொரு தொடரில் நடிச்சிட்டிருந்ததால என்னால வர முடியாம போயிடுச்சு. இதுமாதிரி பல சீரியல்கள் மிஸ் ஆகி இருக்கு. ஆனா, நான் இந்தத் தொடரை மிஸ் பண்ணிட்டோம்னு நினைச்சிருக்கேன். என்னை விட அதிகமா எங்க வீட்ல உள்ளவங்க நான் மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தப்படுறாங்க.
இப்ப நடிச்சிட்டிருக்கிற `சின்ன மருமகள்’ தொடரே முதலில் நான் நடிக்கலைன்னு மறுத்துட்டேன். மறுபடி மறுபடி என்னைத் தேடி வந்ததாலதான் ஓகே சொன்னேன். இப்ப இந்தத் தொடரும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது!” என்றார்.
பர்சனல், புரொபஷனல் எனப் பல விஷயங்கள் குறித்து நவீன் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!