இலங்கை விமானப்படையின் (SLAF) தொழில்நுட்ப மற்றும் மனிதவள நிபுணத்துவத்துடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி சிறுவர் வார்ட் செவ்வாய்கிழமை (செப் 03) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, ரூ. 150 மில்லியன் செலவில் ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் நிதியுதவியுடன் ‘ஹுஸ்ம’ திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இக்கட்டிடத் தொகுதி ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டது.
இச் சிறுவர் வார்ட் அதிநவீன வசதிகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை கொண்டுள்ளது. முதலில் மூன்று மாடி வளாகமாக திட்டமிடப்பட்டாலும் பின்னர், விமானப்படையின் பங்களிப்பு காரணமாக மற்றுமொரு தளத்திற்கு இடமளிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவமனையின் மற்றைய கட்டிடங்களையும் விமானப்படை புதுப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் விமானப்படையின் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன கலந்துக் கொண்டதுடன், ருஹுணு மஹா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே, திஷான் குணசேகர, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித்த மஹிபால, அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர, விமானப்படையின் இலத்திரனியல் மற்றும் கணனி பொறியியல் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் டேமியன் வீரசிங்க, நிர்மாணப் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் சந்தன கீதப்பிரியவும் உட்பட விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.