தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டம்தோறும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. `இத்தனை காலமாக அங்கீகாரம் கிடைக்காத நமக்கு, இப்போதாவது ஏதாவது பதவி கிடைக்காதா..?’ என்று சீனியர்கள் சிலர், ஆதரவாளர்களுடன் அந்தக் கூட்டங்களுக்கு ஆர்வமாகச் செல்கிறார்களாம். ஆனால், “கூட்டத்துக்கு வரும் தலைவருக்கு திராவிடக் கட்சிகள் பாணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும்” என அழுத்தம் கொடுக்கிறார்களாம் அவருடைய அடிப்பொடிகள். “ரெண்டு ஃப்ளெக்ஸ் போர்டு, ஒரு ரோஜா மாலை, நாலு கதர்த்துண்டு இருந்தாப் போதும்னு நினைச்சோம். இவங்க கேட்கிறதெல்லாம் நம்ம லிஸ்ட்டுலயே இல்லியே?!” என்று பதறி ஓடுகிறார்கள் கதர்ச்சட்டைக்காரர்கள். சமீபத்தில் மலை மாவட்டத்துக்கு வந்த தலைவரை வரவேற்று, கைக்காசை இழந்த கதர்களெல்லாம், “தி.மு.க., அ.தி.மு.க-வுல சம்பாதிச்சவன் செலவு பண்றான். இங்க யாரைச் சம்பாதிக்க விட்டாங்க… இப்படிச் செலவு பண்ணச் சொன்னா, கட்சி வளராது… இருக்குறவனும் தெறிச்சு ஓடிடுவான்” என்று கடுகடுக்கிறார்கள்.
முதல்வர் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகும், அமைச்சரவை மாற்றம் தொடர்பான பேச்சு மட்டும் அறிவாலயத்தில் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. ‘அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், முப்பெரும் விழா நடப்பதற்கு முன்பு எப்படியும் அமைச்சரவை மாற்றம் இருக்கும். அதில் தனக்கும் ஓரிடம் இருக்கும்’ என ஆசைக்கடலில் மிதக்கிறாராம், வறண்ட மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர். கண்ணில் காண்போரிடமெல்லாம், “அமைச்சரவையில் எனக்கும் இடம் இருக்கும்னு சொல்றாங்க.
அதுக்கு வலுசேர்க்கும்விதமா நீங்களும் என்னைப் பற்றித் தலைமையிடம் கொஞ்சம் பெருமையாகச் சொல்லுங்க” எனக் கோரிக்கை வைக்கிறாராம் அவர். அதோடு நிற்காமல், அறிவாலய சீனியர்கள் சிலரைச் சந்தித்து, “அமைச்சரவை மாற்றம் இருக்குமா… தலைமையிடம் என்னைப் பற்றி என்ன அபிப்ராயம் இருக்கிறது?” எனக் கருத்து கேட்டிருக்கிறார். இதில் கடுப்பான சீனியர்கள், “முதலில் உங்களின் மா.செ பதவி மிஞ்சுகிறதா எனப் பாருங்கள்…” என அவரது கனவில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்களாம். பாவம், தூக்கம் கலைந்து துக்கத்தில் அலைகிறாராம் அந்த மாவட்ட நிர்வாகி.
2001-2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கைப் பிடித்து உள்ளே நுழைந்த அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் உட்பட ஏழு பேர்மீது வழக்கு பதிந்ததோடு, அவர்கள் பெயரில் வாங்கப்பட்டிருந்த 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துகளையும் முடக்கியது.
இந்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் தனபாலும் ஆஜராகி, அவருக்கு எதிராகச் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனாலும், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையைப் பெரிதாக பொருட்படுத்தாத அனிதா, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்துவந்தாராம். சமீபத்தில் நடந்த விசாரணையின்போது அனிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், இது குறித்த தனது கண்டனத்தைப் பதிவுசெய்த நீதிபதி, “அடுத்த மாத விசாரணையில் அனிதா கண்டிப்பாக ஆஜராக வேண்டும்” எனவும் உத்தரவிட்டிருக்கிறாராம். ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று வழக்கறிஞர்கள் எச்சரிக்க, பரிதவித்துக்கொண்டிருக்கிறாராம் அமைச்சர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் கட்சியின் அமைப்பை மொத்தமாகக் கலைத்து அதிரடி காட்டியிருக்கும் மருத்துவர் ராமதாஸ், ‘விரைவில் இந்த இரண்டு மாவட்டங்களிலுமுள்ள சட்டமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தலைவர், செயலாளர் நியமிக்கப்படுவார்கள்’ என்றும் அறிவித்திருந்தார். இது பற்றி விசாரித்தால், “ ‘நாடாளுமன்றத் தேர்தலின்போது பலரும் ஆளுங்கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தேர்தல் வேலைகளைப் பார்க்கவில்லை’ எனக் கூட்டணிக் கட்சியினர் தலைமையிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார்கள்.
அந்தப் புகாரில் உண்மை இருப்பது தெரியவரவே, தலைமை இந்த தடாலடி முடிவை எடுத்திருக்கிறது. இது இத்தோடு நிற்கப்போவதில்லை. மாநிலம் முழுக்க மாற்றம் இருக்கும்” என்கிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தில். ஆனால், “வடமாவட்டங்களில் நிர்வாகிகளை மாற்றலாம். மற்ற மாவட்டங்களில் பதவியில் இருப்பவர்களைத் தூக்கினால், மாற்று ஆள் கிடைப்பது கஷ்டம்” என்று கையைப் பிசைகிறார்களம் சீனியர் நிர்வாகிகள்.
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்தநாளையொட்டி, தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலிலுள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அவர்கள் புறப்பட்டுச் சென்ற அரை மணி நேரம் கழித்து வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியாக மரியாதை செலுத்திவிட்டுப் புறப்பட்டார். “விருதுநகரைத் தாண்டித்தான் அ.தி.மு.க சீனியர்களெல்லாம் வந்தார்கள்.
பாலாஜியை, அவர்களே உடன் அழைத்து வந்திருக்கலாம். அல்லது பாலாஜி வரும் வரையில் காத்திருக்கவாவது செய்திருக்கலாம். எதற்காக அவரைக் கழற்றிவிட்டார்கள்?” என்று கட்சிக்குள் பட்டிமன்றம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. “சமீபகாலமாகவே ராஜேந்திர பாலாஜி யாருடனும் ஒட்டாமல் தனி ட்ராக்கில் பயணிக்கிறார். அது நெற்கட்டும்செவலில் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது” என்கிறார்கள் விருதுநகர் இலைக் கட்சிப் புள்ளிகள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY