பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாமீது வழக்குப் போடப்பட்டிருப்பதால் கட்சி மேலிடம் அவரை மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சித்தராமையா, கட்சி மேலிடமும் எம்எல்ஏக்களும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிபார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவர் மீது வழ‌க்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தார். இதனால் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்ற தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.