விசாகா கமிட்டி:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பு கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக SIAA-GSICC கமிட்டியின் (பாலியல் விவகாரங்களுக்கான புகார் குழு) சார்பில் விசாகா (Vishaka) கமிட்டி உருவாக்கப்பட்டது.
இந்த விசாகா கமிட்டி சங்கத்தின் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில், உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா, சமூகச் செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் உள்ளனர். தவிர வழக்கறிஞர் ஒருவரை மேலும் நியமனம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். நேற்று நடந்த கூட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டோர் 5 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுபடி ஆரம்பிக்கப்பட்டது…
நடிகர் சங்கத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு கமிட்டி இருப்பது நடிகர் நடிகைகள் பலருகே தெரியாத ஒரு விஷயமாக உள்ளது. இதனால் தான் பொதுச் செயலாளரான விஷால் கூட, `தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல், சுரண்டல் குறித்து விசாரிக்க நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று விசாகா கமிட்டி ஒன்று இருப்பதை உணர்த்தும் விதமாக, ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினார்கள்.
இது குறித்து சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி எஸ்.முருகனிடம் பேசினோம்.
”விசாக கமிட்டி என்பது நீதிமன்ற உத்தரவுபடி ஆரம்பிக்கப்பட்டதாகும். அதாவது SIAA கமிட்டியின் (Gender sensitisation and internal complaints committee) சார்பில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கமிட்டி ஆரம்பித்து இப்போது வரை மூன்று முறை கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா என ஐந்து பேர்களும், சங்கத்தில் இருந்து நான், தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோரும் இந்த கமிட்டியில் இருந்தனர். இந்தாண்டில் புதிதாக வழக்கறிஞர் ஒருவரும், சமூக செயற்பாட்டாளர் ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேவைப்படும் உதவிகளை கமிட்டி செய்யும்…
இத்தனை ஆண்டுகளில் கமிட்டியை தேடி சின்னச் சின்ன வழக்குகள் வந்திருக்கின்றன. நாங்களும் அதற்கு தீர்வுகள் கண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட விஷயம் என்பதால் அவர்களின் பெயர்களை சொல்வது சரியாக இருக்காது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார்கள் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் உதவிகளையும் கமிட்டி செய்து கொடுக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம், யூடியூப்பில் திரைத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும். பாலியியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளோம். உள்பட பல தீர்மானங்களை நிறைவேற்றினோம். இந்த தீர்மானக் கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் கொடுத்துள்ளோம்” என்கிறார் துணைத் தலைவரான பூச்சி முருகன்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 8-ம் தேதி நடைபெறும் சூழலில், விசாகா கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து மேலும் விவாதிக்க உள்ளதாகவும் தகவல்.