கார்பெட் புலிகள் காப்பகத்தின் முன்னாள் இயக்குநரான ஐஎஃப்எஸ் அதிகாரி ராகுல், உத்தரகாண்ட் மாநிலத்தின் ராஜாஜி புலிகள் காப்பகத்தின் இயக்குநராக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் அந்த மாநில வனத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் புறக்கணித்து, அவர்களின் அதிருப்திக்கு மத்தியில் நிகழ்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

புஷ்கர் சிங் தாமி
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.என்.எஸ் நட்கர்னி, “பணி நியமன ஆணை செப்டம்பர் 3-ம் தேதி வாபஸ் பெறப்பட்டது” எனக் குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், “அவர் மீது ஏற்கெனவே, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு எப்படி பணி ஆணை வழங்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினர். இதற்கும் பதிலளித்த அரசு தரப்பு, அந்த அரசு அதிகாரி கட்டம் கட்டப்பட்டு, குறிவைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “ஒரு நிர்வாகத் தலைவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு கீழே இருப்பவர்கள் அதை அப்படியே செய்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை இந்த நாட்டில் இருக்கிறது. மாநில முதல்வர்கள் ஒன்றும் அரசர்கள் அல்ல.. பழைய காலத்து அரசர்களைப் போல ஆணையிட்டால் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது… நாம் நிலப்பிரபுத்துவ காலத்தில் இல்லை… முதல்வர் என்பதால் எதுவும் செய்யலாமா? அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் இருப்பதைக் கவனித்தும், அந்த அதிகாரி மீது முதல்வர் ஏன் சிறப்பு கவனம் வைத்திருக்கிறார்? அந்த அதிகாரியை ராஜாஜி புலிகள் காப்பகத்தில் பணியமர்த்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதை முதல்வர் ஏன் புறக்கணிக்கிறார்.

முதல்வரின் ஆதரவு இருப்பதை கவனித்துதான், இதற்கு துணை செயலாளர், முதன்மை செயலாளர், மாநில வனத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த நியமானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அந்த அதிகாரி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்றால் அவர் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தீர்கள்…?” என கேள்வி எழுப்பி கண்டித்திருக்கிறார்கள்.