சாங்லி: நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சிலை உடைந்த விவகாரம் குறித்து கொந்தளித்த அவர், “சிவாஜி மகாராஜை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். அவர் சிவாஜி மகாராஜிடம் மட்டுமல்ல, மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “மகாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம். பல்வேறு நபர்கள் இங்கு வேலை செய்து மக்களை ஒன்றுபடுத்தி அழைத்துச் சென்றனர். இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவுக்கு வழி காட்டியுள்ளனர். சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு மகராஜ், பூலே உட்பட பலர் மகாராஷ்டிராவுக்கு மட்டுமின்றி, முழு நாட்டுக்கும் முன்னேற்றம் மற்றும் உத்வேகத்தை அளித்தனர். இங்கு சில நாட்களுக்கு முன் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ‘சிவாஜி மகாராஜிடம் மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார். அவர் மன்னிப்பு கேட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
சத்ரபதி சிவாஜி சிலைக்கான ஒப்பந்தத்தை, தகுதியான ஒருவருக்கு கொடுக்காமல், ஆர்.எஸ்.எஸ்.காரர் யாருக்காவது கொடுத்திருக்கலாம். அதற்காக அவர் மன்னிப்புக் கோரி இருக்கலாம். அல்லது, சிலை செய்ததில் ஊழல் நடந்திருக்கலாம். ஒருவேளை பிரதமர் இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கலாம். அவர்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை உருவாக்கினார்கள். ஆனால், அது அப்படியே இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை. அந்த வகையில், நரேந்திர மோடி, சிவாஜி மகாராஜை அவமதித்துள்ளார். அவர் சிவாஜி மகாராஜிடம் மட்டுமல்ல, மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு வரும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கட்சித் தலைவர் கார்கேவிடம் கூறினேன். அதற்கு அவர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் மிகவும் ஆழமாக உள்ளதால், இங்கு வரும்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார். காங்கிரஸின் சித்தாந்தம் உங்கள் மரபணுவில் இருப்பதால் எனக்கும் அதே மகிழ்ச்சி இருக்கிறது.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் நம்மோடு வந்தனர். ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை’ திறப்பதே நமது ஒரே குறிக்கோளாக இருந்தது. ஏனென்றால் வெறுப்பு நிறைந்த இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை. அன்பு நிறைந்த இந்தியாவையே நாங்கள் விரும்புகிறோம்.
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல. பல நூற்றாண்டுகளாக இதைச் செய்து வருகிறார்கள். இந்த சித்தாந்தப் போர் பழமையானது. இன்று பாஜக – காங்கிரஸ் இடையேதான் போட்டி. முன்பு, இதே போரை சிவாஜி மகாராஜும், பூலே ஜியும் நடத்தியுள்ளனர். சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு ஜி மகராஜ், பூலே, அம்பேத்கர் போன்றோரைப் படித்தால், இவர்கள் அனைவரின் சித்தாந்தமும், காங்கிரஸின் சித்தாந்தமும் ஒரே மாதிரியானவை என்பது தெரியும்” என தெரிவித்தார்.
உடைந்த சத்ரபதி சிவாஜி சிலை: மகாராஷ்டிராவில் சிந்துதுர்க்கின் மல்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று (டிச.4) திறந்து வைக்கப்பட்ட 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி சிலை ஆக.26 மதியம் 1 மணியளவில் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலை கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, “சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். எனக்கும், எனது சகாக்களுக்கும், எல்லோருக்கும் சிவாஜி மகாராஜ் ஓர் அரசர் மட்டுமல்ல, அவர் மரியாதைக்குரியவர். சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்கும் அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ‘பண்பு’ முற்றிலும் வேறுபட்டது. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணக்கத்துக்குரிய தெய்வத்தை விட எதுவும் பெரியது அல்ல” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி சிலை உடைந்த சம்பவத்துக்கு, ஆளும் மகாயுதி கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றதும் கவனிக்கதக்கது.
महाराष्ट्र और पूरा देश जानना चाहता है आखिर प्रधानमंत्री जी ने माफ़ी क्यों मांगी!
1. बिना merit के RSS वालों को contract देने के लिए
2. मूर्ति के निर्माण में हुए भ्रष्टाचार के लिए
3. या छत्रपति शिवाजी महाराज जैसे पूजनीय महापुरुष का अपमान करने के लिएकारण कोई भी हो, प्रधानमंत्री… pic.twitter.com/dt3juZ9iZz
— Rahul Gandhi (@RahulGandhi) September 5, 2024