பெங்களூரு: ரசிகரை கொன்ற வழக்கில் கன்னடநடிகர் தர்ஷன் மீது பெங்களூரு போலீஸார் 3,991 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
கன்னட முன்னணி நடிகர் தர்ஷன்(47) கடந்த ஜூன் 17ம் தேதி நடிகையும் அவரது காதலியுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொன்றவழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது மேலாளர் நாகராஜ், பவித்ரா கவுடா உட்பட 17 பேர்இவ்வழக்கில் கைது செய்யப்பட் டனர். இவர்கள் அனைவரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு தர்ஷன்சிகரெட், தேநீர் கோப்பையுடன் சொகுசாக இருந்த புகைப்படம் வெளியானதால், தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ரேணுகா சுவாமி கொலை வழக்கை விசாரித்த பெங்களூரு கூடுதல் ஆணையர் கிரீஷ் நேற்று பெங்களூரு மாநகரத்தின் 29-வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தர்ஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தர்ஷன் 2-வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த குற்றப்பத்திரிகையானது 231 சாட்சியங்களின் அடிப்படை யில் 10 பகுதிகளாக தொகுக்கப் பட்டுள்ளது. ரேணுகா சுவாமியை கடத்தியது, சடலத்தை முதலில் பார்த்தது உள்ளிட்ட 61 பேர் இதில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர செல்போன், பணபரிமாற்றம் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ”தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி (33) என்பவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். மேலும் தர்ஷனுக்கு திருமணமாகி குழந்தை இருப்பதால், அவரை விட்டு பிரிந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதேபோல அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் பவித்ரா கவுடா இதுகுறித்து தர்ஷனிடம் கூறியுள்ளார்.தர்ஷன் தனது உதவியாளர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் ரேணுகா சுவாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்திவந்து, பெங்களூருவில் வாகனம்நிறுத்தும் இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் இறந்த ரேணுகா சுவாமியின் உடலை உதவியாளர்கள் மூலம் சாக்கடையில் வீசியுள்ளார். மேலும் இந்த கொலையை மறைக்க வேறு நபர்களுக்கு பணம் கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள செய்துள்ளார்”என அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.