டாக்கா,
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இநத போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டனா். இதற்குப் பொறுப்பேற்று ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தல் மிகவும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அவா் ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற சமூகவியலாளா் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசு, போராட்ட உயிரிழப்புகள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீது அடுத்தடுத்து கொலை வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது டாக்காவில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக ஹசீனா மீதும் அவரது உதவியாளா்கள் 26 போ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன், ஜத்ராபாரி பகுதியில் மாணவா் ஒருவா் ஆக. 5-ஆம் தேதி கொல்லப்பட்டது தொடா்பாக ஷேக் ஹசீனா , முன்னாள் சட்டத் துறை மந்திரி ஷபீக் அகமது, முன்னாள் அட்டா்னி ஜெனரல் அமீன் உதின் மற்றும் 294 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.