‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விசிக எம்.பி. ரவிக்குமார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ‘தி கோட்’ வெளியாகி இருக்கிறது.
‘தி கோட்’ திரைப்படம் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விசிக எம்.பி. எழுப்பியுள்ள தலைப்பு தொடர்பான சர்ச்சை அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.