பண்டார் செரி பெகவான்: புருனே சென்றுள்ள பிரதமர் மோடிஅந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துபேசினார். அப்போது, விண்வெளி துறையில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென்கிழக்கு ஆசிய நாடானபுருனேக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவான் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறை. இந்நிலையில், புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரசு இல்லமான ‘இஸ்தானா நுருல் இமான்’ அரண்மனையில் பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது ராணுவம், வர்த்தகம் – முதலீடு, உணவு பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதாரம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வளர்ந்து வரும் தகவல் – தொலைதொடர்பு தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், இணையதள பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, புருனேயில் இந்திய செயற்கைக் கோள்களுக்கான டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக இரு தலைவர்கள் முன்னிலையில் புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைச்சர்கள் கையெழுத்து: இதில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் புருனே போக்குவரத்து மற்றும்தகவல் தொடர்பு அமைச்சர் பெங்கிரன் ஷம்ஹாரி கையெழுத்திட்டனர்.
இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி திட்டத்தில் புருனே முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முன்பு இந்த துறையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி புருனேயில் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியா நிறுவியது. இது கிழக்கு நோக்கி ஏவப்படும் அனைத்து செயற்கைக் கோள்களையும் கண்காணிக்க உதவுகிறது.
இரு நாடுகள் கூட்டறிக்கை: இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு சுல்தான் ஹாஜி மதிய விருந்து அளித்தார். பின்னர் இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமைதி, ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை பராமரிக்கவும், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப சுதந்திரமான கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் தடையற்ற சட்டபூர்வமான வர்த்தகத்தை மதிக்கவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. கடல்சார் பிரச்சினைகளுக்கு சர்வதேச சட்டத்தின்படி குறிப்பாக கடல் சட்டம் தொடர்பான ஐ.நா.உடன்படிக்கையின்படி அனைத்துநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இரு தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
தீவிரவாதத்துக்கு கண்டனம்: பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். தீவிரவாத செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர்கள், அத்தகைய செயல்களை எந்த நாடும் ஆதரிக்க கூடாது என வலியுறுத்தினர். குறிப்பாக, தங்கள் நாட்டில் தீவிரவாதிகள் செயல்படுவதை அனுமதிக்க கூடாது என்றும் தீவிரவாதிகளை நீதியின் முன் நிறுத்த உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கடந்த 2 ஆண்டுகளாக புருனே நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்தது. இதனால் இருதரப்பு வர்த்தகம் குறைந்தது. இந்நிலையில், அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக புருனேயில் இருந்து நீண்டகால அடிப்படையில், திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனைநடத்தினர். ‘ஆசியான்’ அமைப்பை மேலும் பலப்படுத்த இருதரப்புக்கும் பயன் அளிக்கும் துறைகளில் இணைந்து பணியாற்றுவது என இருவரும் உறுதிபூண்டனர். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு விமான சேவை: இரு தலைவர்களும் பேசியபோது, இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, புருனே தலைநகர் பண்டார் செரி பெகவானில் இருந்து சென்னைக்கு வரும் நவம்பர்மாதம் முதல் நேரடி விமான சேவைஇயக்கப்படும் என புருனே ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதன்மூலம் இரு நாட்டு மக்கள் இடையிலான உறவு, வர்த்தகம், சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புருனே பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘இந்தியா – புருனே இடையேஉறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவைசந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்பு உறவை பலப்படுத்துவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் மோடி ‘டோல்’ அடித்து உற்சாகம்: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவர் ‘டோல்’ இசைக்கருவி வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் மோடி தனது புருனே பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் அன்புடன் வரவேற்றார். இதையடுத்து, இந்திய வம்சாவளியினர் சார்பில் விமான நிலையத்தில் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு ‘டோல்’ தாளக் கருவியை வாசித்தார். பல்வேறு பெண்கள் இணைந்து மகாராஷ்டிர நாட்டுப்புற நடனமாட, பிரதமர் மோடி ‘டோல்’ இசைக்கருவி வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளேன். இந்தியா – சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்தும் பல்வேறு சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன். இந்தியாவின் சீர்திருத்தங்களும், இளைஞர்களின் திறமையும் நம் நாட்டை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றியுள்ளன. இதுதவிர நெருங்கிய கலாச்சார உறவுகளையும் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார். மோடி தனது 2 நாள் பயணத்தில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கை சந்திக்கிறார். சிங்கப்பூர் தொழிலதிபர்கள், செமி கண்டக்டர் உற்பத்தியாளர்களுடன் பேசுகிறார். பிரதமர் மோடி கடந்த2018-ம் ஆண்டுமுதல் 5-வது முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.