கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மற்றும் வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (செப்.7) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் பூக்கள் விற்பனை நேற்று (செப்.5) அமோகமாக இருந்தது. பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் காலை முதல் மாலை வரை பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் நாளை சிறப்புப் பூஜை, மலர் அலங்காரங்கள் நடக்கப்பட உள்ளதால், மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களின் பிரதிநிதிகள், பூமார்க்கெட்டுக்கு வந்து மூட்டை மூட்டையாக மலர்களை வாங்கிச் சென்றனர்.
அதேபோல், சில்லறை வியாபாரிகளும், தங்களின் வியாபாரத்துக்காக வழக்கத்தை விட அதிகளவில் பூக்களை வாங்கிச் சென்றனர். பூக்கள் விற்பனை குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோவை பூமார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூ.1000, முல்லைப்பூ கிலோ ரூ.800 வரையும், ஜாதிப்பூ கிலோ ரூ.600 வரையும், சம்பங்கி கிலோ ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.280 முதல் ரூ.300 வரைக்கும், மாலை தயாரிக்கப் பயன்படும் கோழிக்கொண்டை ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா பூ ஒரு கிலோ ரூ.400-க்கும், மருகு கட்டு ரூ.20-க்கும், துளசி கிலோ ரூ.60-க்கும், மரிக்கொளுந்து ஒரு கட்டு ரூ.70-க்கும், வாடாமல்லி கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது’’ என்றனர்.
விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்: அதேபோல், சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்துவர். இன்று விநாயகர் சிலைகளின் விற்பனையும் மார்க்கெட் பகுதியில் களைகட்டியது. வீடுகளில் வைக்கக்கூடிய ஒரு அடி முதல் 3 அடி வரை பல்வேறு அளவுகளில், பல்வேறு வடிவங்களில் விநாயகர்கள் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பூமார்க்கெட் அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர்.
பெரும்பாலான பொதுமக்கள், ஒரு அடி உயரம், 2 அடி உயரம் கொண்ட, வண்ண வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட சிலைகளையே வாங்கிச் சென்றனர். விநாயகர்கள் சிலைகள் ரூ.100 முதல் ரூ.3,500 வரை அதன் ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், விநாயகர் பூஜைக்கு பயன்படுத்தப்படும் அருகம்புல் ஒரு கட்டு ரூ.30-க்கும், எருக்கம்பூ மாலை ஒன்று ரூ.30-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.40-க்கும், மாவிலைக் கட்டு ஒன்று ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.