Actor Darshan Case: “அந்தரங்க உறுப்பில் ஷாக்…'' – நடிகர் தர்ஷன் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரின் ரசிகர் ரேணுகாசுவாமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜூலை மாதம், நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இதற்கிடையில், நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வைரலானது. இது தொடர்பாக தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நடிகர் தர்ஷன்

இந்த நிலையில்தான், கர்நாடகா காவல்துறை, ரேணுகாசுவாமி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அதில் “நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கும்பலால் தாக்கப்பட்டதில், ரேணுகாசாமியின் மார்பு எலும்புகள் உடைந்திருக்கிறது. அவரது உடல் முழுவதும் மொத்தம் 39 காயங்கள் இருந்தது. தலையில் ஆழமான வெட்டு காயம் இருந்தது. தர்ஷன் மற்றும் அவரது கும்பல் ரேணுகாசுவாமியின் விதைப்பையை சேதப்படுத்த மெகர் கருவியைப் பயன்படுத்தி, அந்தரங்க உறுப்பில் ஷாக் வைத்து கொலை செய்திருக்கிறார்கள். ரேணுகாசுவாமி வெட்டிக் கொல்லப்படுவதற்கு முன்பு, மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அனுபவித்தது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது.

கொலையைச் செய்த பிறகு, தர்ஷனும் மற்ற குற்றவாளிகளும் தங்கள் செல்வாக்கையும், பணத்தையும் பயன்படுத்தி, அந்த உடலை அப்புறப்படுத்தினர். ஆதாரங்களையும் அழிக்க முயன்றனர். மேலும், கைதிலிருந்து தப்பிக்க வேறுசிலர் ஆஜராகும்படி தயார் செய்ய முயன்றனர். தர்ஷனிடமிருந்து கைப்பற்றப்பட்ட துணிகளில் ரேணுகாசாமியின் ரத்தத்தின் தடயங்கள் இருந்தது. ரேணுகாசாமியை கடத்தும்போதும், சித்திரவதை செய்தபோதும், கொலை செய்து, உடலை அப்புறப்படுத்திய பின்பும் கொலையாளிகள் தர்ஷனுக்கு அனுப்பிய மெசேஜ்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான், தர்ஷன் “பிசாசு” படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூரு சென்றிருந்தார்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தர்ஷன்

இந்த வழக்கில் தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாகதான் பெயரிடப்பட்டிருக்கிறது. தர்ஷனின் வழக்கறிஞர் குழு ஜாமீன் மனுவை சமர்ப்பிக்க தயாராகி வருகிறது. ஆனால், சிறைக்குள் அவருக்கு வழங்கப்பட்ட சொகுசு நடவடிக்கை தொடர்பாக மூன்று புதிய வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஜாமீன் பெறுவது எளிதான காரியமல்ல என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.