வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘GOAT’ படம் வெளியாகியிருக்கிறது. படத்தில் எக்கச்சக்கமான சர்ப்ரைஸ் கேமியோக்களை வைத்திருக்கிறார்.
அதில் முக்கியமான ஒன்று நடிகர் சிவகார்த்திகேயனின் கேமியோ. படத்தில் அவர் பேசியிருக்கும் வசனமும் ரசிகர்களின் அதிர்வலைகளைப் பெற்றிருக்கிறது.
‘நீங்க இதைவிட எதோ முக்கியமான வேலையா போறீங்க. நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்குறேன்!’ என முக்கியமான காட்சியில் விஜய்யிடம் சிவகார்த்திகேயன் கூறுகிறார். விஜய் அரசியலுக்கு செல்வதையும் இன்னும் ஒரு படத்தில்தான் நடிக்கப்போகிறார் என்பதையும் விஜய்யின் இடத்திற்கு அடுத்து யார் வரப்போகிறார் என்கிற ஆர்வத்தையும் கனெக்ட் செய்து ரசிகர்கள் இந்த வசனத்திற்கு ஆர்ப்பரிக்கின்றனர்.
விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் முன்பிருந்தே நல்ல பிணைப்பே இருந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்திலேயே விஜய்யை பல முறை பேட்டி எடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தன்னுடைய பாணியின் நகைச்சுவையாக வேடிக்கைத்தனமாக கேட்கும் கேள்விகளை விஜய் அந்த பேட்டிகளிலேயே பல முறை ரசித்து கமெண்ட் அடித்திருக்கிறார். வழக்கமாக எப்போதுமே எதற்கும் பெரிதாக ஓப்பன் ஆகாமல் பேசும் விஜய் ஒரு சில தொகுப்பாளர்களின் பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் மட்டுமே ஓப்பன் ஆவார். அதில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.
விஜய் கலந்துகொள்ள சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய `ரசிகன் எக்ஸ்பிரஸ்’, `காவலன் எங்கள் காதலன்’, ‘நண்பன்’ படத்தின் வெற்றிவிழா ஆகியவை அத்தனை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். வழக்கமான அந்த இறுக்கமான விஜய்யை இந்த நிகழ்ச்சிகளில் பார்க்கவே முடியாது. சிகாவுக்கு ஈடுகொடுத்து விஜய்யும் சிகாவை கலாய்த்து தள்ளுவார்.
சிவகார்த்திகேயன் படிப்படியாக வளர்ந்து திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த போதும் ஆரம்பக்கட்டத்திலிருந்தே அவரை வாழ்த்துவதற்கு விஜய் தவறியதில்லை. சிகா ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்த சமயத்திலேயே ‘நண்பன்’ பட விழாவில், ‘நீதான் ஹீரோ ஆயிட்டியே அப்புறம் இங்க என்ன ணா பண்ணுற?’ என விஜய் கேட்டிருப்பார். ‘நீங்க உங்க வாயால சொல்லும்போதுதான் சார் நான் ஹீரோன்னு எனக்கே ரெஜிஸ்டர் ஆகுது!’ என சிவகார்த்திகேயனும் மேடையிலேயே விஜய்க்கு நன்றியைத் தெரிவித்திருப்பார். அதேமாதிரி, விஜய் அவார்ட்ஸில் தன்னுடைய தந்தையைப் பற்றி நினைவுகூர்ந்து சிகா கண்ணீர் சிந்திய நிகழ்வு அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்.
அத்தனை வருடம் தொகுப்பாளராக பணியாற்றிய தொலைக்காட்சியில் நடிகராக மாறி ‘சிறந்த என்டர்டெயினர்’ என்கிற விருதை வென்றிருந்தார். அந்த விருதை அதற்கு முந்தைய வருடம் விஜய்தான் ‘துப்பாக்கி’ படத்திற்காக வென்றிருந்தார். இப்போது விஜய் விருது கொடுக்க, சிகா அந்த விருதை வாங்குகிறார். கண்ணீர் ததும்ப நின்ற சிவகார்த்திகேயனைத் தோளில் தட்டிக் கொடுத்து ‘அவரோட எல்லா படமும் பார்க்குறேன். ரொம்ப நல்லா பண்றாங்க. கிட்ஸூக்கெல்லாம் அவர ரொம்ப பிடிச்சிருக்கு. பிடிச்சிட்டாரு அவரு கிட்ஸ் எல்லாத்தையும் பிடிச்சிட்டாரு!’ என விஜய் வாழ்த்தியிருப்பார். குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகர் என அறியப்பட்ட விஜய் இன்னொரு வளர்ந்து வரும் நடிகருக்கு அதே விஷயத்தைக் குறிப்பிட்டு பாராட்டியது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
சிவகார்த்திகேயனும் அந்த பாராட்டை மறக்கவே இல்லை. பல மேடைகளில் விஜய்யின் அந்த பாராட்டை குறிப்பிட்டு சிகா இன்னமும் நன்றி கூறிக்கொண்டேதான் இருக்கிறார். ‘GOAT’ படத்திலும் விஜய் – சிகா சந்தித்துக் கொள்ளும் காட்சியில் இந்த வசனத்தை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்ட பிறகும் கூட விஜய்யும் சிகாவும் முன்பைப் போலவே அன்பை பரிமாறிக் கொள்வதை கைவிடவில்லை. ‘டான்’ பட சூட்டிங்கும் ‘பீஸ்ட்’ பட சூட்டிங்கும் ஒரே செட்டில் நடைபெற சிவகார்த்திகேயன் தனது ஒட்டுமொத்த படக்குழுவையும் அழைத்துக் கொண்டு விஜய்யை சந்திக்கச் சென்றிருப்பார். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி வைரலாகும். சிவகார்த்திகேயன் முதல் முதலாக தயாரித்து அருண்ராஜா இயக்கிய ‘கனா’ படத்தை தனது குடும்பத்துடன் சிறப்புக் காட்சியில் கண்டுகளித்து படக்குழு மொத்தத்தையும் விஜய் பாராட்டி நெகிழ்ந்ததாக `கனா’ படத்தின் நாயகி ஜஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.
விகடன் சினிமா விருது விழா ஒன்றில் ரஜினிகாந்துக்கு விஜய் விருது வழங்க, அந்த மேடையில் சிவகார்த்திகேயனும் இருந்திருந்தார். ரஜினிகாந்தின் குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்ய அதை ரஜினிகாந்த்தும் விஜய்யும் ரசித்துப் பார்த்து கைத்தட்டியிருப்பார்கள்.
2012 இல் துப்பாக்கி படம் வெளியான சமயத்தில், ‘இன்னைக்கு தேதிக்கு துப்பாக்கிய கையில் வச்சிருக்கவனை விட துப்பாக்கி டிக்கெட் வச்சிருக்கவன்தான் பெரிய ஆளு!’ என சிவகார்த்திகேயன் ட்வீட் செய்திருப்பார்.
12 ஆண்டுகள் கழித்து ஒரு நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விஜய்யின் படத்திலேயே சிவகார்த்திகேயன் கேமியோ செய்கிறார். தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை எடுத்து சிவகார்த்திகேயனின் கையில் திணித்து ‘துப்பாக்கிய பிடிங்க சிவா!’ என்கிறார் விஜய். அடுத்த ஷாட்டில் ‘நீங்க இதைவிட எதோ முக்கியமான வேலையா போறீங்க. நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்குறேன்.’ என சிவகார்த்திகேயன் வசனம் பேசுகிறார். அரங்கத்தின் அதிர்வில் ரசிகர்கள் எதோ செய்தியை புரிந்துகொண்டார்கள் என்பதை மட்டும் தெரிந்துகொள்ள முடிந்தது.
வாழ்த்துகள் விஜய்! வெல்டன் சிவகார்த்திகேயன்!