எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இடம் பிடித்தவர்கள் விஜய் – அஜித்.
விஜய் 1992-ம் ஆண்டு ‘நாளை தீர்ப்பின்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அஜித் 1993-ம் ஆண்டு ‘அமராவதி’ மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அன்று தொடங்கிய இருவரின் பயணமும், இன்று கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக பெரும் ரசிகர்களின் பட்டாளத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய்யின் ‘G.O.A.T’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) வெளியாகிறது. அஜித்தை வைத்து ‘மங்காத்தா’ திரைப்படத்தை எடுத்த வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படி இந்த இரண்டு தமிழ் சினிமா ஆளுமைகளையும் வைத்து இயக்கும் வாய்ப்பு ஒரு சில இயக்குநர்களுக்குத்தான் அமைந்திருக்கிறது. அந்த சில இயக்குநர்கள் இவர்கள்தாம்.
‘நாளைய தீர்ப்பு’ மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய், விஜயகாந்தின் ‘செந்தூரப் பாண்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த விஜயகாந்தின் படத்தில் நடித்தது மூலம், விஜயகாந்தின் மீது விழுந்த வெளிச்சம், விஜய் மீதும் விழத்தொடங்கியது. அதற்குப் பிறகு விஜய் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். வருங்காலத்தில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களாக வலம் வரப் போகிறவர்களை ஒரே திரையில் கொண்டு வந்தவர் இயக்குநர் ஜானகி செளந்தர்தான். இதற்குப் பிறகு விஜய் – அஜித் இருவரையும் ஒன்றாகத் திரையில் கொண்டு வரும் வாய்ப்பு எந்த இயக்குநருக்கும் கிடைக்கவில்லை.
1990ம் ஆண்டு ‘புது வசந்தம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் விக்ரமன், 1996-ம் ஆண்டு விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக’ திரைப்படத்தை இயக்கி வெற்றிக் கண்டார். ‘தேவா’ படத்தில் விஜய் பாடிய ‘ஐய்யயோ அலமேலு’ பாடல் தமிழ் ரசிர்களை முணுமுணுக்க வைக்க, இதைப்பார்த்து விஜய்யை அழைத்து ‘பூவே உனக்காக’ படத்தில் நடிக்க வைத்துள்ளார். விஜய்யை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது இப்படம். இதற்குப் பிறகு ‘சூரிய வம்சம்’ எனும் மெகா ஹிட் படத்தைக் கொடுத்த விக்ரமன், தனது அடுத்தப் படமான ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தை கார்த்தி, அஜித்தை வைத்து இயக்கினார்.
எழிலின் முதல் திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. தனது முதல் திரைப்படமே விஜய், சிம்ரன் என கச்சிதமான ஜோடியாக அமைந்துவிட, மேகமாய் வந்து தமிழ் ரசிகர்களின் மனதைத் தொட்டது இப்படம். இதையடுத்து விஜய் – சிம்ரன் ஜோடி ரசிகர்கள் மனதைக் கவர்ந்துவிட, இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்தனர். இதையடுத்து இயக்குநர் எழில் அஜித்தை வைத்து ‘ராஜா’ படத்தை எடுத்தார்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘என்றென்றும் காதல்’, ‘நெஞ்சினிலே’ திரைப்படத்தை நடித்து முடித்துவிட்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘மின்சார கண்ணா’ திரைப்படத்தில் நடித்தார் விஜய். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘படையப்பா’ படத்தில் ரஜினியை ரம்யா கிருஷ்ணன் செல்லமாக அழைக்கும் ‘மின்சார கண்ணா’ பெயர் பிரபலமாகியிருந்த நிலையில், அதையே விஜய் படத்திற்குப் பெயராக வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார். இதையடுத்து கமலை வைத்து ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’ போன்ற திரைப்படங்களை எடுத்த கே.எஸ்.ரவிக்குமார், 2006-ம் ஆண்டு அஜித்தை வைத்து ‘வரலாறு’ திரைப்படத்தை இயக்கினார்.
‘கேளடி கண்மணி’ மூலம் அறிமுகமான இயக்குநர் வசந்த், ‘நீ பாதி நான் பாதி’ படத்தை எடுத்து முடித்த கையோடு அஜித்தை வைத்து ‘நீ காற்று நான் மரம்’ என ‘ஆசை’ படத்தை இயக்கினார். பிறகு, தனது அடுத்தப் படத்திலேயே விஜய் – சூர்யா இருவரையும் வைத்து ‘நேருக்கு நேர்’ படத்தை எடுத்தார். சூர்யாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் இதுதான்.
1999ம் ஆண்டு அஜித்தை வைத்து ‘வாலி’ திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அப்படம் நல்ல வரவேற்பைப் பெற தனது அடுத்தப் படமாக விஜய்யை வைத்து ‘குஷி’ எடுத்தார். ‘குஷி’யும் கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதைதொடர்ந்து ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது முழுநேர நடிகராக மாறி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த லைன் அப்பில் பிஸியாகிவிட்டார்.
‘முகவரி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என ஹிட் படங்களைக் கொடுத்து உச்சத்தில் இருந்த அஜித், தனது அடுத்தப் படத்தின் வாய்ப்பை அறிமுக இயக்குநராகயிருந்த ஏ.ஆர். முருகதாஸுக்குக் கொடுத்தார். வத்திக் குச்சி பத்திக் கொள்வது போல கிடைத்த வாய்ப்பைத் தீயாய் பிடித்துக் கொண்ட ஏ. ஆர். முருகதாஸ் ‘தினா’ எனும் மெகா ஹிட் படத்தையும், அஜித்திற்கு ‘தல’ எனும் அடை மொழியையும் கொடுத்தார். இதையடுத்து ரமணா,
கஜினி, ஏழாம் அறிவு என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தவர், விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ எனும் மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார்.
இயக்குநர் ஏ.எல் விஜய் அறிமுகம் ஆனது அஜித் படத்தில் தான். கிரீடம் படத்தின் மூலம் அறிமுகமான ஏ.எல் விஜய், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் போன்ற படங்களுக்கு பின்னர் விஜய்யை வைத்து `தலைவா’ எனும் படத்தை இயக்கினார். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து ரிலீஸ் ஆனது அனைவரும் அறிந்ததே.
‘கில்லி’ திரைப்படம் பெரிய ஹிட்டை கொடுக்க கோலிவுட்டின் உச்சத்தில் வசூல் சாதனையில் நடனமாடிக் கொண்டிருந்தார் நடிகர் விஜய். ‘கில்லி’, ‘மதுர’ என மதுரையை நோக்கிச் சென்ற கொண்டிருந்த விஜய்யை ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ பக்கம் திருப்பி ஒரே ஆண்டில் இரண்டு திரைப்படங்களை எடுத்து இரண்டு வெற்றியைக் கொடுத்தார் பேரரசு. இதையடுத்து அஜித்தை வைத்து ‘திருப்பதி’ படம் எடுத்து, அஜித்தை ‘திருப்பதி’ க்கு ஏற்றி இறக்கிவிட்டார். பிறகு தர்மபுரி, பழனி , திருவண்ணாமலை என ஊர் ஊராக வலம் வந்தார் பேரரசு.
‘சென்னை 600028’, ‘சரோஜா’, ‘கோவா’ என ஜாலியான திரைப்படங்களை எடுத்து தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த வெங்கட் பிரபு, பேங்க் ராபரி திரில்லராக அஜித்தை வைத்து ‘மங்காத்தா’ விளையாடி ஜாக்பாட் அடித்தார். ‘மாநாடு’ திரைப்படம் ஹாலிவுட் லெவலில், டைம் லூப்பில் சிறந்த திரைக்கதையாக அமைந்து வெற்றி பெற்றது. இதையடுத்து ரஜினி- தனுஷை வைத்து இயக்கலாம் என்று ஒரு கதை வைத்திருந்தார். வயதைக் குறைக்கும் டி-ஏஜிங் தொழில் நுட்பம் கைகொடுக்க விஜய்யை வைத்து அந்தக் கதையை தற்போது ‘G.O.A.T’ என எடுத்து முடித்துள்ளார். இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் அஜித், விஜய் இரண்டுபேர் கூடவும் நடித்தவர் வெங்கட் பிரபு. ‘ஜி’ படத்தில் அஜித்திற்கு நண்பராகவும், ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய்க்கு மச்சானாகவும் நடித்திருக்கிறார்.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர் ஹெச். வினோத். அஜித்தை இதுவரை பார்த்திராதக் கதாபாத்திரத்தில் பெண்களின் பிரச்னைகளைப் பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை எடுத்தார். இதையடுத்து மீண்டும் அஜித்துடன் கைகோர்த்து ‘துணிவு’ படத்தை இயக்கினார். தற்போது விஜய் தனது திரையுலகை வாழ்விலிருந்து விலகி, அரசியலில் களமிறங்கியுள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்விகள் விஜய் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பாக கொந்தளித்துக் கொண்டிருக்க, அதில் தற்போது ஹெச். வினோத் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இருப்பினும் ஹெச். வினோத், விஜய்க்கு ஏற்ற கதையை செதுக்கி வருகிறார், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்பது கோலிவுட்டில் உறுதியாகியிருக்கும் தகவல்.
இதில் உங்களுக்குப் பிடித்த இயக்குநர்கள் யார்? உங்களைக் கவர்ந்த திரைப்படங்கள் எது? என்பதையும், இதையொட்டிய சுவாரஸ்யமான விஷியங்களையும் கமென்டில் தெரிவிக்கவும்.